உலகம்

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் தடை நீக்கம் – பயணிகள் தொடர்ந்தும் அவதி

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்துச் செயலாளர் ஷோன் டஃபி (Sean Duffy) அறிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தத் தடையினால் ஏற்பட்ட பயணக் குழப்பங்கள் முழுமையாகச் சீரடைவதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும் எனவும், ஏராளமான பயணிகள் இன்னமும் விமான நிலையங்களில் சிக்கித் தவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தகவல் தொடர்பாடல் கோளாறு காரணமாகவே இந்த நாடளாவிய விமானத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) கோரிக்கைக்கு அமைய, ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்படவிருந்த விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்காவில் விதிக்கப்பட்ட மிகப்பெரிய விமானப் போக்குவரத்துத் தடை இதுவாகும்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மார்க்வெய்ன் முல்லின் (Markwayne Mullin), இது அமெரிக்காவிற்கு எதிரான சைபர் தாக்குதல் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *