உலகம்

Nvidia முன்னாள் தலைமை அதிகாரிக்கு செனட் குழு அழைப்பாணை

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, அடுத்த மாதம் செனட் குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு உலகப் புகழ்பெற்ற ‘என்விடியா’ (Nvidia) நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன் ஹுவாங்குக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றான என்விடியாவின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜென்சன் ஹுவாங் நேற்று விலகினார்.

தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சர்ச்சையால், கடந்த ஐந்து நாட்களில் மட்டும் என்விடியா நிறுவனம் பங்குச்சந்தையில் 550 பில்லியன் டொலர் மதிப்பை இழந்துள்ளது.

27 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு அந்த நிறுவனம் சந்திக்கும் மிகப்பெரிய ஐந்து நாள் வீழ்ச்சி இதுவாகும்.

இந்தநிலையில், தென் கரோலினா குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஸ்கொட், ஜென்சன் ஹுவாங் மற்றும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஆகியோருக்கு வியாழக்கிழமை கடிதங்களை அனுப்பியுள்ளார்.

அதன்படி, டிசம்பர் 3ஆம் திகதி செனட் வங்கிக் குழு முன்னிலையில் தாமாக முன்வந்து ஆஜராகுமாறு ஹுவாங்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தவறினால் கட்டாய அழைப்பாணை பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உளவுத்துறை, வெளியுறவு மற்றும் சீனா தொடர்பான பிரதிநிதிகள் சபையின் மூன்று குழுக்களும், டிசம்பர் முதலாம் திகதி ரகசிய விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹுவாங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதற்கிடையே, சீனாவிற்கு நவீன ஏ.ஐ (AI) சிப்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் முயற்சிகளைத் தாமதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கும் டிசம்பரில் செனட் குழு முன் ஆஜராக உள்ளார்.

சர்ச்சையின் பின்னணி

1993ஆம் ஆண்டு முதல் என்விடியா நிறுவனத்தின் முகமாக இருந்து வந்த ஜென்சன் ஹுவாங், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘மெகாஸ்பீட்’ (Megaspeed) நிறுவனத்தின் நிர்வாகியும், சீனாவின் உளவுத்துறை முகவராகச் செயல்பட்டதாக ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகையால் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் (உறவினர் அல்ல) என்பவருடன் தனக்குத் தொடர்பு இருந்ததை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டார்.

ஆனால், இந்த உளவு குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளதுடன், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என அமெரிக்க சட்டமா அதிபர் டோட் பிளான்ச் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, என்விடியா நிறுவனத்தின் மூத்த நிர்வாகியும், தனக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் அதிகாரியுமான கிம்பர்லி பவல் என்பவருடனும் ஹுவாங்கிற்கு மற்றுமொரு திருமணம் கடந்த உறவு இருந்ததாக புதன்கிழமை செய்திகள் வெளியாகின.

நிறுவனத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை

தேசிய பாதுகாப்போ அல்லது நிறுவனத்தின் ரகசியங்களோ சமரசம் செய்யப்படவில்லை என நம்புவதாகவும், இது குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் என்விடியா தெரிவித்துள்ளது.

தற்போது நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) கோலெட் கிரெஸ் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக (Interim CEO) நியமிக்கப்பட்டுள்ளார். நிரந்தர பிரதம நிறைவேற்று அதிகாரியைத் தேடும் பணியில் என்விடியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் என்விடியாவின் சந்தை மதிப்பு 470 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சர்ச்சையால் அந்த நிறுவனப் பங்குகள் உச்ச நிலையிலிருந்து 31 சதவீதம் சரிந்துள்ளன.

40 ஆண்டுகளாக லோரி ஹுவாங்கை மணந்து வாழ்ந்து வரும் ஜென்சன் ஹுவாங்கின் இரு பிள்ளைகளும் என்விடியா நிறுவனத்தில் நிர்வாகிகளாகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *