நாட்டில் இரத்தக் களரியை ஏற்படுத்த முயற்சி; கம்மன்பில வெளியே இருந்தால் ஆபத்து !; அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு சி.ஐ.டி.யில் முறைப்பாடு

அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பி மதங்களுக்கிடையே மோதல் நிலைமைகளை ஏற்படுத்தி நாட்டில் இரத்தக் களரியை ஏற்படுத்துவதற்கு பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கம்மன்பில முயற்சிப்பதாகவும், இதனால் அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் தேசிய துவிச்சர வண்டி பயிற்றுவிப்பாளரான உபாளி ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமது முறைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உபாளி ரத்நாயக்க கூறுகையில்,
ஒக்டோபர் 26ஆம் திகதி உதய கம்மன்பிலவினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டதுடன். நாட்டில் மத ரீதியிலான குழப்ப நிலைகளை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். மதங்கள் தொடர்பில் மக்களுக்கு உள்ள ஆர்வம் மற்றும் நம்பிக்கையை தூண்டி நாட்டை இரத்தக் களரிக்கு கொண்டு செல்லவே முயற்சிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உயர்நீதிமன்றத்தினால்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேரர் ஒருவரின் காவி உடை விடயத்திலும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது தொடர்பில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து ஏற்படக்கூடிய நிலைமைகளை தடுக்குமாறு கோரி முறைப்பாட்டை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கம்மன்பிலவின் கருத்தில் மத ரீதியிலான பிரச்சினைகளுக்கு நாட்டை கொண்டு செல்லக்கூடிய வகையில் பல்வேறு பொய்யான விடயங்களை கூறியுள்ளார். அதில் சுரங்க பாதை அமைக்கப்படவுள்ளதாகவும், இந்து ஆலயங்கள் உள்ளிட்ட ஏனைய மதங்களின் வணக்கஸ்தளங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். அநுராதபுரம் புனித நகரம் அபிவிருத்தி திட்டம் தொடர்பான வர்த்தமானியில் இல்லாத விடயங்களை கூறி மக்களை துண்டும் வகையிலும். மத மோதல்களை ஏற்படுத்தவும் மற்றும் இரத்த களரிகளை ஏற்படுத்தவும் செய்யும் நோக்கத்திலேயே அவரின் கருத்துக்கள் அமைவதாகவே இந்த முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
நாங்கள் பிரஜைகளின் பொறுப்பையே செய்கின்றோம். இவ்வாறான விடயங்கள் நடக்கக்கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த முறைப்பாட்டை செய்கின்றோம் என்றார்.
![]()