வருடாந்தம் 6000 பேருக்கு புதிதாக மார்பகப் புற்று நோய்; 1,000 பெண்கள் உயிரிழக்கின்றனர்

நாட்டில் வருடாந்தம் சுமார் 6000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாவதுடன், சுமார் 1,000 பெண்கள் இந்நோயினால் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்ற போதிலும், அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக சிகிச்சை பெறுவதைத் தாமதிப்பது முக்கிய பிரச்சினையாக காணப்படுகிறது.
இலங்கையில் பெண்களிடையே அதிகளவில் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதையும், அது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் சுகாதார அமைச்சுடன் இணைந்து விசேட தேசிய வேலைத்திட்டத்தை நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவியும் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில், அண்மையில் கூடிய ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
மார்பகப் புற்றுநோயின் தற்போதைய நிலைமை மற்றும் அந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இங்கு விளக்கிக் கூறினர்.
வருடாந்தம் இலங்கையில் ஏறத்தாழ 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகுவதுடன், சுமார் 1,000 பெண்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்ற போதிலும், அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாகச் சிகிச்சை பெறுவதைத் தாமதிப்பது முக்கிய பிரச்சினையாக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கமைய, நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் தொகுதிகள் மற்றும் மாவட்ட மட்டங்களில் சுகாதார மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதுடன், அவற்றில் நேரடியாகவும் பங்கேற்கவுள்ளனர்.
![]()