இலங்கை

ஞானசார தேரர் விவகாரம்; கொழும்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி கம்மன்பில மனு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரம தேவி பூங்காவிற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டத்திற்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்கும் எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவின் புத்தர் சிலைக்கு அருகில் பிக்குகள் குழுவொன்று சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி பொலிஸாரால் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 106 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிக்கை செய்து, குறித்த சத்தியாகிரக போராட்டத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான உத்தரவொன்று பெறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அவ்வுத்தரவு முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது என சுட்டிக்காட்டும் மனுதாரரான உதய கம்மன்பில, மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பத்திலோ, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பத்திலோ அல்லது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அவசர சந்தர்ப்பத்திலோ மட்டுமே இவ்வாறானதொரு உத்தரவை பிறப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ள உலபனே சுமங்கல தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், கொழும்பு பிரதான நீதவான் ஒருதலைப்பட்சமாக அவ்வுத்தரவை பிறப்பித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 9 ஆம் பிரிவின் கீழ் பௌத்த மதத்தை பாதுகாத்து போசிப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ள நிலையில், இவ்வுத்தரவின் மூலம் அரசியலமைப்பின் அப் பிரிவு மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட அவ்வுத்தரவை செல்லுபடியற்றதாக்கும் ஆணையொன்றை பிறப்பிக்குமாறு கோரும் மனுதாரர், அவ்வுத்தரவுக்கு அமைய செயற்படுவதைத் தடுக்கும் உத்தரவொன்றை பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு பிறப்பிக்குமாறும் கோரியுள்ளார்.

மேலும், இம்மனு மீதான விசாரணை முடிவடையும் வரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இடைநிறுத்தும் இடைக்காலத் தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் கோரியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *