சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!… விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!… தொடர்- 18….. சங்கர சுப்பிரமணியன்


ஷின்சாய்பஷிசுஜியின் மற்றொருசிறப்பு இந்த கடைவீதி முழுக்க மிகவும் உயரமான கூரை உள்ளது.ஆதலால் மழை வெயில் என்று எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் ஷாப்பிங் செய்யலாம். இரவில் கேட்கவே வேண்டாம் மின் விளக்குகளின் ஒளியுடன் பிரபிப்பை ஏற்படுத்தும். என் மனைவி பல பொருட்களை வாங்கினாள். பணத்தை பிடுங்குவதற்காகவே சொல்லி வைத்தபடி சில கடைகள் இருந்தன.
அதில் ஒன்று பெண்கள் அதிகம் பயன்படுத்தும் கைப்பைகள் மற்றும் சூட்கேஸ்கள் விற்கும் கடை. ஒரு புடவை எடுத்தால் ஒரு புடவை இலவசம் என்ற கவர்ச்சி இல்லாத இடமில்லை. அதுபோல் அங்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதும் இங்கும் இருந்தது இருந்தது. ஒரு சூட்கேஸ் என் கண்ணில் திரும்பத் திரும்ப விழுந்து வாங்கு என்றது. இலவசத்துக்கு ஆசைப்பட்டு இரண்டு வாங்கவா முடியும்?
பாதி விலையில் ஒன்று மட்டும் கேட்டுப் பாருங்கள் என்று மனைவி வற்புறுத்த காசா பணமா கேட்டுத்தான் பார்ப்போமே என்று கேட்டேன். எதையோ கட்ட எதையோ இழுப்பதுபோல் வந்தால் மலை கிடைக்குமே என்ற எண்ணமே கேட்க வைத்தது. அப்படி கேட்டதில் மலையே கிடைத்ததுபோல் பாதி விலைக்கு ஒரு சூட்கேஸ் தருவதாக கடைக்காரர் சம்மதித்தார்.
இன்னும் சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்கள் இருப்பதால் அப்புறம் வருகிறோம் என்று சொல்லிவிட்டு வந்தோம். அடுத்து பார்க்க வேண்டிய இடம் டோடன்போரி. பெயர் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தேடிப்பிடிப்பதுதான் கடினம். டோடன்போரி என்ற இடம் ஷின்பாஷிசுஜி கடைவீதியின் தென்கோடியில் அம்படயே தொடர்ந்து ஏழுமுதல் பத்து நிமிட நடை தூரத்தில் உள்ளது.
இபிசுபஜி பாலத்தை தாண்டியதும் டோடன்போரி வருகிறது. ரொம்பவம் பில்டப் பண்ணுகிறாயே அது என்ன என்கிறார் மாடசாமி அண்ணாச்சி. அவரின் ஆர்வம் அவருக்கு. சொல்கிறேன் அண்ணாச்சிக்காக கதை சொல்ல ஆரம்பிக்கிறேன். 1612ஆம் , ஆண்டு யசூய் டோடன் என்ற அங்குள்ள வியாபாரி ஒருவர் அங்கு ஓடிக்கொண்டிருந்த க்வை ஆற்றை கால்வாயாக விரிவுபடுத்தும் திட்டத்தை தொடங்கினார்.
அதை அடுத்து அந்த பகுதி பாரம்பரிய நடனமான கபுகி மற்றும் பொம்மலாட்டங்களை நிகழ்த்தும் அரங்கங்கள் நிறைந்த இடமாக வளர்ந்தது. நாளடைவில் அப்பகுதியில் இருந்த அரங்கங்கள் யாவும் மதுக்கடைகள், உணவகங்கள் மற்றும் கடைகள் என்று மாறியுள்ளதை இன்று நாம் காண்கிறோம். இன்று அந்த கால்வாயின் இருபுறங்களிலும்
பல தரப்பட்ட உணவகங்களுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகத் திகழ்கிறது.
இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை கவரும்படி ஒஸாகாவிலுள்ள டோடன்பரியில்
அப்படி என்ன பொழுதுபோக்கு நிறைந்துள்ளன என்பதை சொன்னால் மட்டுமே புரியும். டோடன்பரி கால்வாயின் தெற்கு கரையில் 1935 லேயே நிறுவப்பட்டுள்ள மிகவும் வெளிச்சத்துடன் கூடிய மிகவும் பெரிய நியான் விளம்பரமுள்ளது. இது க்ளிகோ என்ற விளம்பரக் கம்பெனிக்கு சொந்தமானது.
அப்படியென்ன அந்த விளம்பரத்தில் என்கிறீர்களா? அதாவது ஒரு ஓட்டப்பந்தய நீலநிற ஓடுபாதையில் ஓட்டப்பந்தய வீரர் ஓடிவந்து வெற்றிக் கோட்டைத் தொட்டபடி இரு கைகளையும் உயர்த்தி வெற்றியை கொண்டாடுவதை சித்தரிக்கும் விதமாக அந்த விளம்பரம் அமைந்துள்ளது. ஆறாவது முறையாக 2014ல் தரம் உயர்த்தப்பட்ட இந்த விளம்பர பலகை பாரம்பரிய நியான் விளக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
கிட்டத்தட்ட 20 மீட்டர் உயரமும் பத்தரை மீட்டர் அகலமும் கொண்ட இந்த விளம்பரப் பலகை மிகவும் ஆற்றல் மிக்க 140,000 சேமிப்பு பின்னணு சின்னல்களால் இயக்கப் படுகிறது என்பதிலிருந்தை இதன் சிறப்பு எத்தகையது என்பதை புரிந்து கொள்ளலாம். மாலை ஆறுமணியிலருந்து நள்ளிரவுவரை இந்த விளம்பர பலகை ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட மீட்சியை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் அதே சமயம் ஒஸாகாவின் அதிகார பூர்வமற்ற சின்னமாகவும் திகழ்ந்து வருகிறது. அத்தொடு முப்பரிமாண விளம்பர பலகையில் தோன்றும் நகரும் நண்டையும் அது இயந்திர உதவியுடனும் ஒளியமைப்புக்களுடன் நகரும் விதமும் சிறப்புக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.
இந்த அற்புதங்களை எல்லாம் பார்க்கும் போது சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்ட விளையாடி வருவோம் என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது. டோடன்பரி கால்வாயிலே நியான் விளக்கு விளம்பர பலகையுடனே ஜப்பானின் முன்னேற்றத்தைப் பார்த்தபடி விசைப்படகில் பயணித்து மகிழ்வோம் என்று பாட வந்தது.
போருக்கு பின் ஏற்பட்ட இந்த முன்னேற்றம் இதுபோல் எமக்கும் நிகழ்ந்திடாதா என்று எண்ணும்போது முயற்சி திருவினையாக்கும் என்ற மந்திரம்போல் ஒளிமயமயமான எதிர்காலமாய் என் காதினில் ஒலிக்கிறது. அதற்கு ஜப்பானியர் போன்ற முனைப்பு நம்மிடம் ஒருநாள் வரும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.
டோடன்பரியில் சுற்றிப்பார்த்துக் கொண்டே இரவு முழுதையும் களிக்கலாம். ஆனால் வீடு நோக்கி ஓடிவந்த என்னையே நாடி நிற்குதே அனேக நன்மையே உண்மையே என்று சிவாஜி கணேசன் துள்ளிக் குதித்து படத்தில் பாடி வருவதுபோல எனக்கும் நாடு திரும்ப வேண்டியிருந்ததால் சூட்கேஜை வங்கிக் கொண்டு அறைக்கு திரும்ப வேண்டியிருந்ததால் ஷின்சாய்பஷிசுஜி நோக்கி நானும் ஓடினேன்.
அந்த கடைவீதியை அடைந்தும் அங்கே ஏற்கனவே பேசி முடித்திருந்த சூட்கேஸை வாங்கிக் கொண்டு விடுதிக்கு வந்து சேர்ந்தோம். வாங்கி வந்திருந்த நூடுல்ஸ் இரவு உணவுக்கு உதவியது. இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாக நூடுல்ஸ் கொத்துரோட்டியாக சுவையூட்டியது. மறுநாள் நாங்கள் ஒஸாகாவை விட்டு கிளம்ப வேண்டும் என்பதால் எங்கள் பயணப் பொதிகளை தயார் பண்ண ஆரம்பித்தோம்.
(தொடரும்… )
![]()