ரணில் வழங்கிய பொது மன்னிப்பு இரத்தானது; உயர்நீதிமன்றம் அதிரடி

முன்னாள் மனைவிக்கு செலுத்துவதற்காக விதிக்கப்பட்ட 1.74 மில்லியன் ரூபா ஜீவனாம்ச தொகையை செலுத்தத் தவறியமைக்காக 29 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தவருக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை இரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முஹம்மது அமீன் முஹம்மது நசீம் என்பவருக்கு வழங்கப்பட்ட இந்த மன்னிப்பு, அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும் என மூவர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்ப்பளித்துள்ளது.
நீதியரசர் ஜனக் டி சில்வாவினால் அறிவிக்கப்பட்ட இத்தீர்ப்பிற்கு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகியோரும் உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, இத்தீர்ப்பு கடந்த அக்டோபர் 23 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
நசீமிற்கு விதிக்கப்பட்ட 29 மாத சிறைத்தண்டனையில் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலப் பகுதியையே கழித்திருந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக, அவரது முன்னாள் மனைவியான அகமது ஜலீல் ஃபார்மில்லா பேகம் என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த ஜீவனாம்ச உத்தரவை மீறியமைக்காக 2024 ஜூலை மாதத்தில் நசீம் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் அதே ஆண்டின் செப்டம்பர் 12 ஆம் திகதி அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதேபோன்று ஜீவனாம்சத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிறையிலடைக்கப்பட்ட மற்றொரு நபருக்கு ஒரு வார கால தண்டனைக் குறைப்பு மட்டுமே கிடைத்திருந்ததாகவும், நசீமின் சிறைத்தண்டனை அபராதம் செலுத்தாத ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு விசேட சலுகை கிடைத்துள்ளதாகவும் உயர்நீதிமன்றம் அவதானித்துள்ளது.
இரு கைதிகளினதும் ஒப்படைப்பு பிடியாணை பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களின் வேறுபாடு, இவ்வாறான சமத்துவமற்ற நடத்தையை நியாயப்படுத்துவதற்கு ஒரு காரணியாக அமையாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி , நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நசீமிற்கு வழங்கப்பட்ட மன்னிப்பை இரத்து செய்த நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் சட்டபூர்வ தன்மையையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்தும் செல்லுபடியாகும் சிறைத்தண்டனை ஒன்று நிலுவையில் உள்ள நிலையில் விடுதலையாகியுள்ள நசீம், தற்போது “சட்டத்திலிருந்து தலைமறைவாக உள்ள ஒருவராகக்” கருதப்படுவதாகவும், அவர் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளிடம் சரணடைவதே மிகவும் பொருத்தமான நடவடிக்கை என்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியணைதொடர்ந்தும் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்றும், அவரைக் கைது செய்து சிறைத்தண்டனையை அமுல்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இதன் மூலம் போதுமான அதிகாரம் கிடைப்பதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் காணப்படுவதால், சிறைத்தண்டனையை அமுல்படுத்துமாறு கோரி மேலதிக உத்தரவு எதனையும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சட்டப்பூர்வமான நடைமுறையைப் பின்பற்றி அனைத்து விடயங்களையும் பரிசீலித்த பின்னர் ந
![]()