பேராசிரியர் சோமதேவவின் பின்னணியில் சிங்கள-பௌத்த நிகழ்ச்சி நிரல்! ; நீங்கள் இனவாதிகள் இல்லையென நிரூபிப்பதென்றால் செம்மணிக்கு நீதி வழங்குங்கள்

கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் இடங்கள் தொடர்பான குழுவை அமைத்த போது, இந்த ராஜ் சோமதேவவையும் இணைத்திருந்தார். ராஜ்சோமதேவ சுத்த சிங்கள, பௌத்த தேசியவாதி.அவர் நிகழ்சி நிரலொன்றின் அடிப்படையிலேயே இயங்குகின்றார் என்பது தற்போதைய அவரின் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் இந்த நாட்டுக்குள் செய்யட்டும் விசாரணைகள் உண்மைகளை வெளிக் கொண்டு வராது .இந்த அரசாங்கம் நேர்மையாக செயற்பட விரும்புகின்றதென்றால் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்க வேண்டும். இப்போதாவது உங்களின் கண்களை நீங்கள் திறக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் பேசுகையில்,
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவ தனது அறிக்கையின் 17ஆவது பக்கத்தில் ”சுகாதார விபத்து காரணமாக கணிசமானவர்கள் உயிரிழந்து புதைக்கப்பட்டுள்ளமையுடன் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழி ஒத்துப் போவதாகவும், அதனை நிராகரிப்பதற்கு எவ்விதமான காரணமும் இல்லை” என்ற கருத்தை தெரிவித்துள்ளார். அதே பந்தியில் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள உடல்கள் தொடர்பில் நிபுணத்துவ குறைபாடுகள் காரணமாக இன்னும் எத்தனையோ விடயங்கள் செய்யவுள்ள காரணத்தினால் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் முடிவுகளை அறிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுவிட்டு, சுகாதார விபத்தில் நடந்ததை போன்ற கருத்தையும் பதிவு செய்கின்றார். பேராசிரியர் ராஜ் சோமதேவ இவ்வாறு எந்த அடிப்படையில் அறிக்கையில் இந்த கருத்துக்களை பதிவு செய்துள்ளார்?
17 பக்கத்தில் சாரம்சமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிட்ட விபத்து தொடர்பிலும் விபத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் ஆதாரங்கள் எதனையும் சமர்ப்பிக்காமல், முடிவுக்கு வர முடியாது என்று கூறிக்கொண்டு, குறிப்பிட்டவிடயத்தை அழுத்திக் கூறும் வகையில் குறிப்பிட்டுள்ளார் என்றால் அவரின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது
இதேவேளை அவர் இதற்கு முன்னர் மூன்று அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அவர் தனது சொந்த முடிவுகளை அவற்றில் குறிப்பிட்டுள்ளார். முதலாவது அறிக்கையில் பாரிய புதைகுழி என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன்இதற்கு முன்னர் செம்மணி தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்த் தேசியவாதத்தை எதிர்த்த தரப்புகளும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ராஜன் ஹுல் என்பவர் 1999ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில் செம்மணியில் உடல்கள் ஆடைகள் இன்றி புதைக்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு முகாம்களில் இருந்து கொண்டு சென்று செம்மணியில் புதைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் செம்மணி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்த் தேசியப் பேரவையின் நிலைப்பாடானது, ராஜ் சோமதேவ என்பவர் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் இயங்குகின்றார். இதனை நாங்கள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம். அவருடைய கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம். கோதாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் தொடர்பான குழுவை அமைக்கப்பட்ட போது, ராஜ்சோமதேவவையும் இணைத்திருந்தார். அவரொரு சுத்த சிங்கள, பௌத்த தேசியவாதியாவார். அவர் நிகழ்சி நிரரொன்றில் இயங்குகின்றார் என்பது இப்போது வெளிவந்துள்ளது.
இதேவேளை செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளை இந்த நாட்டுக்குள் செய்ய முடியாது என்பதனை தொடர்ச்சியாக கூறி வருகின்றோம். இந்த அரசாங்கம் நேர்மையாக செயற்பட விரும்புகின்றதென்றால் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு நீங்கள் இணங்க வேண்டும். இந்த குற்றங்களை செய்தவர்கள் தனியாக செய்யவில்லை. இதனால் சர்வதேச விசாரணைக்கு இணங்காமல் உண்மையை கண்டறிய முடியாது. இப்போதாவது உங்களின் கண்களை திறக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 600 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 600 உடல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாரதூரமான குற்றம் நடந்துள்ள சம்பவத்தில் அரசாங்கமான நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் இனவாதிகள் இல்லையென நிரூபிப்பதென்றால், முன்னைய ஆட்சியாளர்களில் இருந்து நீங்கள் வேறுபட்டவர்கள் என்பதனை நிரூபிப்பதாக இருந்தால் தயவு செய்து இந்த விடயத்திலாவது சர்வதேச குற்றவியல் விசாரணையை தடுக்காமல் நீங்கள் இதற்கு இணங்க வேண்டும் என்றார்.
![]()