திருமலையில் இரு பெண்களைக் கடத்திக் கொலை செய்த சம்பவம்: மேலும் 3 கடற்படையினர் கைது

திருகோணமலை, பாலையூற்றுப் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு இரண்டு பெண்களை வெள்ளை வானில் கடத்திச் சென்று, திருகோணமலை கடற்படை முகாமின் ‘கன்சைட்’ எனப்படும் நிலத்தடி இரகசிய அறையில் அடைத்து, சித்திரவதை செய்து படுகொலை செய்த சம்பவம் தொடர்பில், கொழும்பில் வைத்து திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்ட 3 கடற்படை அதிகாரிகளையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுடீன் நேற்று செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 9 கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், மேரி டெல்ஷியா மற்றும் சசிகுமார் தேன்மொழி ஆகிய இரண்டு பெண்களை வெள்ளை வானில் கடத்திச் சென்று, திருகோணமலை கடற்படை முகாமின் நிலத்தடி இரகசிய அறையில் அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி.) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், கடந்த மாதம் 5 ஆம் திகதி கே.எச். கீத்திக்கா சந்தமாலி மற்றும் எம். அருணி தினிசா ஆகிய இரண்டு பெண் கடற்படையினரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கடற்படையினரான ஞானசேகரம் றொபட், பி.எச். சந்திரசிறி, எம்.வீ.கே. சமிந்த குமார மற்றும் பீ.டபிள்யூ.எஸ். ஞானக்குமார ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேற்கண்ட கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான மாத்தளை, பூஸா மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற கடற்படை நிர்வாகப் பிரதான கீழ்நிலை அதிகாரிகளான எம்.எச். அருண துசார மென்டிஸ், கே.சீ. சுரேக டி சில்வா மற்றும் ஆர்.எம்.யூ. குமார ரத்நாயக்க ஆகிய மூவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த திங்கட்கிழமை (19) கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று செவ்வாய்க்கிழமை (20) திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுடீன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்தக் கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை இரண்டு பெண் கடற்படையினர் உட்பட 9 கடற்படையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி.யினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()