இலங்கை

செம்மணி அறிக்கையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் ஆதிக்கம்!

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் ராஜ் சோமதேவ வெளியிட்டுள்ள அறிக்கையில் மனிதப்புதை குழியில் உள்ள எச்சங்கள் இயற்கையான மரணம் இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லையென்று கூறியுள்ளமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்படுகின்றது இந்த விடயத்தை பார்க்கையில் இந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கங்கள் போல் இராணுவ புலனாய்வின் ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படுகிறார்களா என்ற சந்தேகம் எங்களுக்கும் எழுகின்றது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

தற்பாேது பேராசிரியர் ராஜ் சோமதேவ தொடர்பில் தொடர்ச்சியாக இங்கு பேசப்படுகின்றது. அதாவது செம்மணி மனித புதைகுழியில் காணப்படும் எச்சங்கள் மற்றும் எலும்புகள் தொடர்பில்இதுவரை காலம் வரையில் கூறப்படாததை ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளதாகவும், இயற்கையான மரணம் இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லையென்று கூறியும் அது தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை சாட்சியாளர்களுக்கு புலனாய்வு அதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக மேலதிக சொலிசிட்ட ஜென்ரல் திலீப பீரிஸ் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் தெரிவித்த விடயம் பாரதூரமானதாகும்.

இந்த இரண்டு விடயங்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் எங்களுக்கும் எதிர்பாராத சந்தேகங்கள் எழுகின்றன.அதாவது, இந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கங்கள் போல் ராணுவ புலனாய்வின் ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அடிப்படியென்றால், கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் மனித படுகொலைகள் தொடர்பில், இவர்கள் அடிபணிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

அதேநேரம் மீண்டும் நாட்டில் தலைதூக்கும் இனவாத நடவடிக்கைகளை பார்க்கும்போது எங்களுக்கு சந்தேகங்கள் எழுகின்றன. குறிப்பாக தலைதூக்கி இருக்கும் பெளத்த இனவாதிகளின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அடிபணியாமல் இருக்கும்வரை நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இந்த விடயத்தில் அரசாங்கம் எவ்வளவு காலத்துக்கு நின்று பிடிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் இவர்களின் அழுத்தங்களும் ஆங்காங்கே வெளியிடப்படும் அறிக்கைகளையும் பார்க்கும்போது, தற்போது நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளின்போது, எதிராளிகளுக்கு எதிராக உறுதியான சாட்சியங்கள் இல்லை என தெரிவித்து, அவர்களை விடுவிக்க வேண்டும் என தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதனால் அரசாங்கம் இனவாதம் தலைதூக்குவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் ராணுவ புலனாய்வு பிரிவினர் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *