இலங்கை

மட்டக்களப்பில் பெரும் சோகம்; கடந்த 9 மாதங்களில் 92 பேர் தற்கொலை

மட்டக்களப்பு, நாவற்குடா பிரதேசத்தில் 44 வயதுடைய பெண் ஒருவர் வீட்டின் அறையிலுள்ள கூரையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சனிக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. மாவட்டத்தில் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அக்டோபர் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 92 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், மாவட்டத்தில் மீண்டும் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா கணக்கப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ரவீந்திரன் நிரோஜினி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இந்தப் பெண் சம்பவத்தினமான சனிக்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைப் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை 147 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில், 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அக்டோபர் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 92 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் கல்லடிப் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த 19 வயது இளம் யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியிருந்ததுடன், கடந்த 15 ஆம் திகதி சித்தாண்டிப் பகுதியில் 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இவ்வாறு மாவட்டத்தில் மீண்டும் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதனால், இது தொடர்பாக மாவட்டத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்தி, இதற்கான காரணங்களைக் கண்டறிந்து தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *