இலங்கை

ஞானசார தேரருக்கு மட்டுமல்ல 63 பேருக்கும் இதே நிலை!

கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி, அவருக்கு சாதாரண உடை அணிவிக்கப்பட்டமையானது சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்துக்கு அமைவாகவே இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது 63 பௌத்த தேரர்கள் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்களுக்கும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் படி செயற்பட வேண்டிய நடைமுறை ஒன்று உள்ளது. இந்தச் சம்பவத்தில் எந்தவொரு சிறப்பு விதிவிலக்கும் செய்யப்படவில்லை.

இதேவேளை, இன்று நீதிமன்றத்திற்கு ஞானசார தேரர் சாதாரண உடையில் அழைத்து வரப்பட்டமை சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கோட்டே சங்க சபை, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.

பௌத்த ஒழுக்க நெறியின் பிரகாரம், ஞானசார தேரர் பாரதூரமான, மன்னிக்க முடியாத பெரும் குற்றங்களை புரிந்த பௌத்த துறவி என்றோ அல்லது அவரது காவி உடையைக் களையும் அளவுக்குப் பாரதூரமான காரணம் எதுவும் பதிவாகியிருக்கவில்லை எனத் தமது சங்க சபைக்குத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாசன ரீதியாக அந்தத் தேரர் தொடர்பில் ஒழுக்கவியல் விசாரணையை நடத்தி, அவரது துறவற ஆடையைக் களைவதா அல்லது தொடர்ந்து ஆடையை அணிய அனுமதிப்பதா என்பது தமது சங்க சபைக்குரிய பொறுப்பாகும் என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, அவரது காவி உடையை அகற்றாது, தொடர்ந்து காவி ஆடையை அணிவதற்கு அவருக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு கோட்டே சங்க சபையின் முதன்மைப் பதிவாளர், கொடபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *