இலங்கை

இலங்கை கடலில் ஈரானியக் கப்பல்களுக்கு உதவினால் அமெரிக்காவின் தடை நிச்சயம் அமுலாகும்; தெளிவாகச் சுட்டிக்காட்டும் அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர்

இலங்கை கடலில் நீண்டநாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் ஈரானியக் எரிபொருள் தாங்கிக் கப்பல்களுக்கு ஏதாவது வகையில் உதவினாலும் அமெரிக்காவின் தடை நிச்சயம் அமுலாகும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர்ஒருவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் தவித்துக் கொண்டிருக்கும் ஈரானியக் கப்பல்கள் தொடர்பாக கவலைகள் ஏதேனும் எழுப்பப்பட்டுள்ளதா என்ற டெய்லி மிரரின் கேள்விக்கு பதிலளித்த இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், “தனியார் இராஜதந்திர ரீதியிலான தொடர்புகளின் உள்ளடக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது” என்று குறிப்பிட்ட அதேவேளை, ‘சட்டவிரோத ஈரானிய வருவாய்க்கான’ வழிகளை அடைப்பதற்கும், ஈரானிய ஆட்சியுடன் வணிகம் செய்வதிலுள்ள ஆபத்துகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடனும் பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்தது.

அமெரிக்கத் திறைசேரியின் வெளிநாட்டுச் சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் (OFAC) மூலம், தடைசெய்யப்பட்ட கப்பல்கள் உட்பட அமெரிக்க தடைகள் தொடர்பான தகவல்கள் பகிரங்கமாகக் கிடைக்கப் பெறுகின்றன என்று தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஏதேனும் உதவிகளை வழங்கும் பட்சத்தில் விதிக்கப்படக்கூடிய தடைகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், கடல்சார் தடைகளைத் தவிர்க்கும் பயிற்சி தொடர்பான செப்டம்பர் 25 ஆம் திகதியிட்ட செய்திக் குறிப்பை மேற்கோள் காட்டினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“தடைசெய்யப்பட்ட கப்பல்களின் செயல்பாடுகளுக்கு வசதி செய்து கொடுத்ததற்காக—தகவல் தரகர்கள், எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் சரக்கு சான்றளிப்பாளர்கள் உள்ளிட்ட நிறுவனங்களை அமெரிக்கா முன்னரே சுட்டிக்காட்டியுள்ளது. தடைசெய்யப்பட்ட கப்பலுக்கு எரிபொருள், உணவு அல்லது பிற பொருட்களை வழங்குவது போன்ற சேவைகளை அளிப்பது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அமெரிக்கத் தடைகளின் ஆபத்துக்கு (சாத்தியமான சிவில் அல்லது குற்றவியல் தண்டனைகள் உட்பட) உட்படுத்தும் என்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது.”

இதற்கிடையில், வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில்,

அமெரிக்கா தனது பொதுவான கொள்கைக் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த இரண்டாம் நிலைத் தடைகளை (secondary sanctions) விதித்துள்ளதாகவும், இது உலகளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறதே தவிர இலங்கை அல்லது வேறு குறிப்பிட்ட எந்தவொரு நாட்டையும் மட்டும் இலக்கு வைக்கவில்லை என்றும் கூறினார்.

இந்த இரண்டாம் நிலைத் தடைகள் ஆகஸ்ட் 24 அன்று அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டன. இதன்படி, அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்கு ஏதேனும் தனிநபர் அல்லது நிறுவனம் சேவைகளை வழங்கினால், அவர்கள் அமெரிக்க நிதி அமைப்பைப் பயன்படுத்துவதற்கான உரிமையை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய மோதல் சூழ்நிலை காரணமாக இதுபோன்ற கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் மட்டுமன்றி வேறு சில பெருங்கடல்களிலும் சுற்றித் திரிகின்றன என்றும், இந்த அமெரிக்க இரண்டாம் நிலைத் தடைகள் உலகம் முழுவதற்கும் பொதுவாகப் பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *