திலீபனின் சிலையை வைத்தது யாரென அறிய பொலிஸார் முயற்சி; அது தொடர்பாகவே விசாரணை

தியாக தீபம் திலீபனின் சிலையை அகற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் மட்டுமல்லாது, இலங்கையில் நல்லுறவோடு வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களின் மனங்களிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளனர். இது மிகவும் வருந்தத்தக்க ஒரு செயலாகும் என யாழ். பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக யாழ். மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பிரமுகருமான வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவில் தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“விசாரணையின்போது குற்றப்புலனாய்வுத் துறையினர் நல்லூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிலை தொடர்பான விவரங்களை என்னிடம் கேட்டிருந்தார்கள். அதற்கு நான் தெட்டத் தெளிவாக ஒரு விடயத்தைக் கூறினேன். அந்தப் பகுதியில் நிறுவப்பட்ட சிலைக்கும் எங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இச்சிலை நிறுவப்பட்டது தொடர்பான செய்திகளை இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாகவே பார்த்து அறிந்துகொண்டேனே தவிர, சிலை வைக்கப்பட்டமை தொடர்பான எந்த விவரமும் எனக்குத் தெரியாது. சிலை நிறுவப்பட்டபோது நான் அந்த இடத்தில் இருக்கவில்லை. அது தொடர்பான எந்தத் தகவலும் என்னிடம் இல்லை என்பதையும், இவ்விடயத்தில் நான் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினேன்.
தொடர்ந்து, ‘தியாக தீபம் திலீபனின் ஆவணக் காப்பகம்’ தொடர்பில் வினவினார்கள். அதற்கு, ‘2023ஆம் ஆண்டிலிருந்து யாழ். மாநகரசபையிடம் அனுமதி பெற்று, உரிய முறைப்படி குறித்த ஆவணக் காட்சியகத்தை நான்காவது ஆண்டாக இந்த முறையும் நடத்தி முடித்துள்ளோம். 2023ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பொலிஸார் இந்த ஆவணக் காட்சியகத்திற்கு எந்தவொரு இடையூறையும் ஏற்படுத்தியதில்லை. அவர்களும் கண்டும் காணாமல் ஒரு வகையில் அனுமதி அளித்தது போல்தான் இந்த ஆவணக் காட்சியகம் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தங்குதடையின்றி நடைபெற்றது.
நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் காட்சிப்படுத்தவில்லை. தியாக தீபம் திலீபன் பிறந்தது முதல் இறந்தது வரையிலான அவருடைய வாழ்வியல் வரலாற்றை மட்டுமே காட்சிப்படுத்தியிருந்தோம்’ எனக் கூறினேன்.
அடுத்ததாக, ‘இந்த ஆவணக் காட்சியகத்திற்கான நிதி எங்கிருந்து பெறப்படுகிறது?’ எனக் கேட்டார்கள். ‘2023ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளிலிருந்தோ அல்லது வெளிநாட்டு நபர்களிடமிருந்தோ எந்த நிதியும் பெறப்படவில்லை. இந்த மண்ணிலிருந்தே நிதி திரட்டப்படுகிறது. இதில் பெரும் தொகையை எனது சொந்தப் பணத்திலிருந்தும், சட்டத்தரணி மணிவண்ணன் தனது சொந்தப் பணத்திலிருந்தும் வழங்கி கடந்த நான்கு ஆண்டுகளாக ஒழுங்குபடுத்தி வருகிறோம். வெளிநாடுகளிலிருந்து எந்த நிதி உதவியையும் நாங்கள் பெறுவதில்லை. இந்த மண்ணுக்காகச் செய்ய வேண்டிய கடமையாக நினைத்தே இதனைச் செய்கிறோம்’ என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தேன்.
அடுத்த கேள்வியாக, ‘இந்தச் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்டார்கள். ‘சட்டம், ஒழுங்கை அடிப்படையாகக் கொண்டு சிலையை அகற்றியதாக நீங்கள் கூறினாலும், பொலிஸார் சிலையை அகற்றியது வருந்தத்தக்க செயலாகும். இது தமிழ் மக்களின் மனங்களில் மட்டுமல்ல, திலீபனை நேசிக்கும் சிங்கள மக்களின் மனங்களிலும் மிகப்பெரிய ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் திலீபனை இனம், மதம், மொழி கடந்து தமிழ், சிங்கள மக்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்துத் தரப்பினரும் பெருமளவில் நினைவுகூருகிறார்கள். எங்கள் ஆவணக் காப்பகத்திற்குத் தமிழ் மக்கள் மட்டுமன்றிச் சிங்கள மக்களும் வந்து, திலீபனின் பாதத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அந்தச் சிங்கள மக்கள் என்னிடம் வைத்த ஒரேயொரு கோரிக்கை: ‘இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருப்பவை தமிழ் மொழியில் மட்டுமே உள்ளன; அவற்றைச் சிங்கள மொழியிலும் வைக்க வேண்டும்’ என்பதாகும்.
எனவே, சிலையை அகற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் மட்டுமன்றி, இத்தீவில் நல்லுறவோடு வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் மனங்களிலும் ஆறாத வடுவை உருவாக்கியுள்ளீர்கள். இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.
இன்று இந்தியாவில் பிறந்த காந்தியின் சிலையை யாழ்ப்பாணத்தில் வைத்து வழிபடுகிறோம். ஆனால், யாழ்ப்பாணத்தில் பிறந்து காந்திக்கு நிகராக அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த திலீபனின் சிலையை இந்த மண்ணில் வைத்து எங்களால் நினைவுகூர முடியாமல் இருப்பது மனவருத்தத்திற்குரியது. எனவே, பொலிஸாரின் இந்த நடவடி்க்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தெளிவாகக் கூறினேன்.
விசாரணையின் இறுதியில் பொலிஸார் கூறுகையில், ‘நாங்கள் இந்த நினைவேந்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முக்கிய காரணம், திலீபனின் பிரதான பகுதியில் சிலை ஒன்று நிறுவப்பட்டமையே ஆகும். இதுவே இவ்விடயம் பெரிய அளவில் கவனம்பெறக் காரணமாக அமைந்தது. கடந்த காலங்களில் ஆவணக் காப்பகம் தொடர்பாக நாங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; சிலை நிறுவப்பட்டதாலேயே இந்த விசாரணையைத் தொடங்க வேண்டியிருந்தது’ எனத் தெளிவுபடுத்தினர்.
இந்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், இது தொடர்பான விவரங்களைச் சட்டமா அதிபருக்கு அனுப்பவுள்ளதாகத் தெரிவித்தனர். அதன் பின்னர் மீண்டும் அழைப்பது பற்றியோ அல்லது அழைக்காமல் விடுவது குறித்தோ வேறு எதையும் தெரிவிக்கவில்லை” என்றார்.
![]()