கோத்தா, ரணில், நாமலின் வழக்குகளை விசாரிக்கும் கோட்டை நீதிபதிக்கு கொலை மிரட்டல்!

முன்னாள் ஜனாதிபதிகளான கோத்தாபய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய மிக முக்கியமான வழக்குகளை விசாரித்து வரும் நீதவானொருவருக்கு கடிதம் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நீதவானுக்கு கடிதமொன்று கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்தக் கடிதத்தில் ”உங்கள் நடவடிக்கை அளவுக்கு அதிகமானது” என்று குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் அவர் குறித்தக் கடிதம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனை தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கோட்டை நீதிவான் பசன் அமரசேனவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாகக் கிடைத்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, நீதிவான் பசான் அமரசேன பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதம் யூடியூப் தளத்தில் வெளியாகியமை தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இச்சம்பவத்தையடுத்து, கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளான கோத்தாபய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான வழக்குகள் அத்தடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுரேஷ் சலேவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகள் இந்த நீதவான் முன்னிலையே நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()