நினைவேந்தல் இறுதிநாள் வரை விடாது திலீபனின் சிலையை முன்னரே அகற்ற பொலிஸார் முயன்றனர்

“தமிழர்களின் உணர்ச்சிகளோடு எவரும் விளையாட வேண்டாம். அரசியல் ரீதியான எந்தவித துரோகங்களும் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தியாகதீபம் திலீபனின் எழுச்சியை மக்கள் எழுச்சியாக மாற்ற வேண்டும். அதன் ஊடாக எமது நினைவேந்தல் உரிமையை வென்றெடுத்து, அவரின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றுதிரளுங்கள்” என தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நினைவேந்தல் குழுவினர் மேற்கண்டவாறு கூறினர்.
இங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
“தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பமானபோது, நினைவிடத்தில் தியாகதீபத்தின் உருவச்சிலை கொண்டுவந்து வைக்கப்பட்டு காலை 9:45 மணிக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆனால், அஞ்சலி ஆரம்பமாகி சில மணிநேரங்களிலேயே, உயர்மட்ட அரசியல் அழுத்தங்கள் காரணமாக அந்தச் சிலையை அகற்றுவதற்கு யாழ்ப்பாணப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாக எமக்கு நம்பகமான செய்தி கிடைத்தது.
அந்நிலையில், பொலிஸார் சிலையை அகற்றுவதற்கான ஆயத்தங்களுடன், தமது வாகனத்தில் 8-க்கும் மேற்பட்ட சீருடை தரித்த மற்றும் சீருடையற்ற நபர்களுடன் குறித்த வீதியால் இரண்டு, மூன்று தடவைகள் நடமாடியதுடன், நல்லூர் அரசடி வீதியில் தரித்து நின்றார்கள். பொலிஸாரின் இந்த நகர்வைக் கண்டவுடனேயே, அங்கிருந்த மக்களும் நாங்களும் உடனடியாக ஒன்றுகூடி அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்தோம்.
அவ்வேளையில், நினைவுச் சிலைக்கான அனுமதிப் பத்திரம் எமது கைகளில் இல்லாதிருந்ததால், அப்பகுதிக்கு பொறுப்பான மாநகரசபையிடம் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம். மாநகர முதல்வருடன் தொடர்புகொண்டு, பொலிஸாரின் இந்தச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்துமாறும், தற்காலிக அனுமதியை வழங்குமாறும் கேட்டுக்கொண்டோம்.
எனினும், மாநகர முதல்வர் இதுவொரு சர்ச்சைக்குரிய விடயம் எனக் கூறி, சிவஞானத்துடன் பேசுமாறு தெரிவித்தார். ஆனால், நாங்கள் அவருடன் தொடர்புகொள்ளவில்லை. பின்னர், மாநகரசபை உறுப்பினர் மதுசிகான் ஊடாக ஒரு பிரேரணையை முன்வைப்பதன் மூலம் அனுமதி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. அதற்கிணங்க, தற்காலிக அனுமதி கோரும் பிரேரணையை உறுப்பினர் மதுசிகான் முன்வைத்தார்.
ஆனால், முதல்வர் அப்பிரேரணையைத் தளர்வுறச் செய்து, செப்டம்பர் 15 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரையிலான அனுமதியாகத் தனது பிரேரணையாக முன்மொழிந்தார். அதனை இன்னுமொரு உறுப்பினர் ஆமோதித்து, அந்தத் தீர்மானத்தை பலவீனப்படுத்தி நிறைவேற்றிக்கொண்டார்கள்.
நாங்கள் ஏன் நிரந்தர அனுமதிக்கு விண்ணப்பிக்கவில்லை எனப் பலர் கேட்கின்றனர். அந்த இடத்திற்கான நிரந்தர அனுமதி என்பது, நினைவுச் சின்னம் என்ற அடிப்படையில் 1988 ஆம் ஆண்டே மாநகரசபையால் வழங்கப்பட்டு அங்கே கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாங்கள் புதிதாக ஒரு நிரந்தர அனுமதிக்குச் செல்வதாயின், 1975 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க நினைவுச் சின்னங்கள் அமைத்தல் தொடர்பான சட்டக்கோவையின் 7 ஆம் பிரிவின்படி, அக்காணி தனியார் காணியாக இருந்தால் கட்டிட அனுமதி மட்டுமே போதுமானது. மாறாக, அது அரசாங்கக் காணியாகவோ, உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான காணியாகவோ அல்லது உள்ளூராட்சி மன்றத்தின் பயன்பாட்டில் உள்ள காணியாகவோ இருந்தால் உள்ளூராட்சி அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும் என அச்சட்டம் குறிப்பிடுகின்றது.
தற்போது வட மாகாணசபை இயங்காத நிலையிலும், உள்ளூராட்சி அமைச்சர் இல்லாத நிலையிலும், உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரங்கள் முற்றுமுழுதாக மாகாண சபையின் ஆளுநரிடமே செல்லும். எனவே, இச்சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கும் இந்த அரசு நிச்சயமாக அந்த அனுமதியை மறுத்துவிடும் என்பதால், ஏற்கனவே நிரந்தர அனுமதி உள்ளது என்ற அடிப்படையிலேயே நாங்கள் ஆளுநரிடம் அனுமதி கோரவில்லை.
2016–2017 காலப்பகுதியில் உடைக்கப்பட்ட தூண் மட்டுமே இருந்த நிலையிலும், நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருந்த சூழ்நிலையிலும், பொலிஸாரின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலேயே நாங்கள் அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தோம்.
குறிப்பாக 2018 ஆம் ஆண்டு இந்நினைவேந்தலை நடத்துவது தொடர்பாக மாநகரசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, இந்நினைவேந்தலை மாநகரசபையே பொறுப்பேற்று நடத்த வேண்டும் எனத் தீர்மானித்தால், சபை இல்லாத காலத்தில் அரசு தரப்பு இதனை நடத்தாது விட்டுவிடும்; அல்லது வேறு தரப்பிடம் சபை சென்றால் நினைவேந்தலை நீர்த்துப்போகச் செய்துவிடுவார்கள் என்ற அச்சம் இருந்தது. அதனால், இதனை ஒரு சுயாதீன நினைவேந்தல் குழுவே நடத்த வேண்டும் என்ற அடிப்படையில், அன்றைய முதல்வர் ஆர்னோல்ட் அவர்களின் பூரண சம்மதத்துடனும், சபையின் ஏகோபித்த ஆதரவுடனும் நினைவேந்தல் பொறுப்பு எமது குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்விடயத்தை முதல்வரோ அல்லது சபையோ சரியாகக் கையாண்டிருந்தால் சிலையை அகற்ற வேண்டிய நிலைமை வந்திருக்காது. பொலிஸார் இதனைச் செய்ய முற்பட்டமை தனிப்பட்ட பொலிஸாரின் முடிவல்ல. கடந்த காலங்களைப் போல ஆட்சியில் இருக்கும் சிங்கள பேரினவாத அரசு, தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை அடக்குவதற்காகக் கையாண்ட ஒரு வழிமுறையாகவே இதனை நாங்கள் கருதுகிறோம். சிலை வைக்கப்பட்ட ஒரு மணித்தியாலத்திற்குள் அதனை அகற்றுவதற்குக் காட்டிய அவசரம் தெற்கின் அழுத்தம் மட்டுமல்ல.
நினைவிடத்தில் கண்காணிப்புக் கமரா (சி.சி.ரி.வி.) பொருத்தப்பட்டது குறித்துப் பலர் கேள்விகளை எழுப்புகின்றனர். சிலை வைக்கப்பட்ட அன்றைய தினமே பல பிரச்சினைகள் எழுந்தமையாலேயே கண்காணிப்புக் கமராவைப் பொருத்தினோம்.
மூன்றாம் நாள், இரண்டு நபர்கள் அச்சிலைக்கு அருகில் வந்து, அதனைச் சுரண்டி அகற்றுவதற்கு முற்பட்டபோது, எமது கைபேசி மூலமாக அதனை காணொளியாகப் பதிவு செய்து வைத்துள்ளோம். அதனை ஊடகங்களுக்குச் சமர்ப்பிக்கவும் தயார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் இன்றி அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாக இந்நினைவேந்தலை முன்னெடுத்து எமது உரிமையை வலுப்படுத்த வேண்டும் என்பதே எமது விருப்பம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தியாகதீபத்தின் சிலையை வைத்ததற்காகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் நால்வரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, வரும் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்காகக் கொண்டுவரவுள்ளார்கள். அவ்வழக்கை 2013 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புத் திருத்தச் சட்டத்தின்கீழ் கொண்டுசெல்ல முயற்சிப்பதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் மிகத் தெளிவாக ஒரு செய்தியைக் கூற விரும்புகிறோம். தமிழ் மக்களுக்காக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் எமது விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த எமது குலதெய்வத்தை நினைவுகூரும் உரிமையை உங்களால் ஒருபோதும் தடுத்துவிட முடியாது. இதனை நீங்கள் பயங்கரவாதம் என்று கூறுவீர்களானால், தமிழ் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சிலைகளும் நினைவுச் சின்னங்களுமே எங்களைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தின் அடையாளங்கள்!
எனவே, தயவுசெய்து தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். எந்தவித அரசியல் துரோகமுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து திலீபன் அண்ணாவின் நினைவேந்தலை மக்கள் எழுச்சியாக மாற்ற வேண்டும். பொய்யான அல்லது சட்டவிரோதமான எந்தச் செயற்பாடுகளையும் நாங்கள் செய்யவில்லை. எனவே, முரண்பாடுகளை மறந்து இனிவரும் காலங்களில் நடைபெறும் எழுச்சிப் போராட்டங்களில் அனைவரும் பங்கேற்று ஆதரவு தர வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
![]()