ஜனாதிபதியின் நாடளாவிய பேரணிகளுக்கு திடீர் பிறேக்; வேகப்படுத்தாமல் இடைவெளிவிட்டு நடத்த முடிவு
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்த நாடளாவிய ரீதியிலான பகிரங்கப் பேரணிகளுக்கு இடையிலான கால இடைவெளியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்வதைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு பேரணிகளை நடத்த தேசிய மக்கள் சக்தி ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்ததாகக் கூறினார்.
இருப்பினும், தேசிய மக்கள் சக்தி தற்போது அந்த கால அட்டவணையை திருத்தியமைக்கவும், பேரணிகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
“நாங்கள் ஆரம்பத்தில் குறுகிய கால இடைவெளியில் பேரணிகளை நடத்த திட்டமிட்டிருந்தோம். இருப்பினும், அட்டவணை திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, சில பேரணிகள் முதலில் திட்டமிட்டதை விடப் பிந்தி நடத்தப்படலாம். அனைத்துப் பேரணிகளும் திட்டமிட்டபடி நடைபெறும், ஆனால் நெருக்கடியான கால அட்டவணைக்கு பதிலாக நீண்ட இடைவெளிகளுடன் நடத்தப்படும்,” என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி திஸாநாயக்க தனது பகிரங்கப் பேரணிகளின் தொடரை செப்டம்பர் 6 ஆம் திகதி களுத்துறையில் ஆரம்பித்தார், அதனைத் தொடர்ந்து அனுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய இடங்களில் பேரணிகள் நடைபெற்றன.
![]()