இலங்கை

நான் விடுதலைப் புலியல்ல கணக்கிலேயே புலி என்றேன்; அவர்களுடன் எந்தத் தொடர்புமில்லை

நான் விடுதலைப் புலியல்ல. கணக்கிலேயே புலி அதேபோன்று எனக்கு புலியை பிடிக்கும் இதனையே நான் கூறினேன். அத்துடன் எனக்கும் தமிழீழ விடுதலைப் புலியை சேர்ந்த எவருடனும் தொடர்பும் கிடையாது என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அர்ச்சுனா எம்.பி மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் கணக்கில் புலி அதனையே கூறினேன். தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புலி இருக்கின்றது. அதனை பார்த்து யாராவது புலியென்று கூறியதற்காக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. அத்துடன் நான் புலி டயஸ்போரா என்று எங்கும் கூறவில்லை. ஆங்கிலத்தில் டயஸ்போரா என்பது என்னவென்று ஜனாதிபதிக்கு தெரியாமல் இருக்கலாம். நாடு கடந்து வாழ்பவர்களையே டயஸ்போரா என்று கூறுவது. அவர்கள் தமிழாகவே, முஸ்லிமாகவோ அல்லது சிங்களமாகவோ இருக்கலாம்.

ரீ பில்டிங் ஶ்ரீலங்கா திட்டத்திற்கு பெருமளவில் பணம் வழங்கப்படுகின்றது. அதனை டயஸ்போராக்களே வழங்குகின்றனர். அதனையே எமது மக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றுகின்றனர் என்று கூறினேன். இதில் புலியை சேர்க்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார்.

எவராவது நீ புலியா என்று கேட்டால் நான் ஆம் என்று கூறுவேன். எனக்கு புலியை பிடிக்கும்.நீங்கள் உங்களை சிங்கங்கள் என்று கூறுவது போல புலிகள் என்று கூறுவதில் தவறில்லை. நான் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை பயன்படுத்தியிருந்தால், அந்த இயக்கத்துடன் இணைந்திருந்தால் கூறலாம். நான் வெளிநாடுகளில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்திக்கச் சென்றதில்லை.

சகோதரர் ராம் தடை செய்யப்பட்ட நபர்களை வெளிநாட்டில் சந்தித்துள்ளார். அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் கரும்புலியை சேர்ந்தவர்களுடன் சந்திப்பை நடத்தியுள்ளார். அப்படியென்றால் நானா புலி அல்லது புலிகளின் பெயரை பயன்படுத்தி வாக்குக் கேட்டவர்களா புலி? என்று கேட்கின்றேன்.

நான் வைத்தியராக இருந்தவன். சிங்கள மக்களுக்கு மருந்து கொடுத்தவன். என்னை சிறையில் போட வேண்டும் என்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அப்படி பிடித்தால் என்னாலோ எனது சட்டத்தரணியாலோ எதுவும் செய்ய முடியாது. விசாரணைக்கு அழைத்தால் வருகின்றேன். மனசாட்சியுள்ள ஜனாதிபதி யாராவது வந்தால் என்னை விடுதலை செய்வார்கள்.

இந்த 40 வருட வாழ்க்கையில் நான் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்திருக்கின்றேனா? விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய யாருடனாவது பேசியிருக்கின்றேனா? எமது டயஸ்போராவிடம் பணம் பெற்றுள்ளனர் என்பதனை நான் காட்டியுள்ளேன். ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். எனக்கு பயமில்லை. என்னை எந்தச் சட்டத்திலும் போடுங்கள் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *