பலதும் பத்தும்

காய்ச்சல் இருக்கும் போது குளிக்கலாமா?

பருவநிலை மாற்றம், வைரஸ் தொற்று போன்ற காரணங்களால் காய்ச்சல் ஏற்படுவது பொதுவானது. காய்ச்சலால் அவதிப்படும்போது குளிக்கலாமா? தண்ணீர் குடிக்கலாமா? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. காய்ச்சலின் போது இயல்பாகவே உடல் வெப்பநிலை அதிகரிக்கும். சிலருக்கு வியர்வையும் அதிகரிக்கக்கூடும்.

இதனால் உடலில் திரவ இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனை ஈடு செய்வதற்கு வைத்தியரின் பரிந்துரையின்பேரில் போதுமான அளவு தண்ணீரோ அல்லது ஓ.ஆர்.எஸ். கரைசல், இளநீர், சூப் போன்ற திரவ பானங்களையோ உட்கொள்ளலாம். இத்தகைய திரவங்களை தவிர்த்தால் உடலில் நீர்ச்சத்து குறையக்கூடும். அதன் கரணமாக தலைவலி, தலை சுற்றல், சோர்வு, வாய் உலர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

காய்ச்சலின் போது பசியின்மை ஏற்படுவது இயல்பானது. அந்த நேரத்தில் அதிக எண்ணெய், அதிக காரம் கலந்த உணவுகளை சாப்பிடுவது சிலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். அதற்கு பதிலாக கஞ்சி, கிச்சடி, இட்லி போன்ற எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ளலாம். பசி இல்லாதபோது கட்டாயத்தின்பேரில் அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் போதுமான திரவமும், ஊட்டச்சத்தும் உடலுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

காய்ச்சல் வந்துவிட்டால் குளிக்கவே கூடாது என்று பலரும் நினைக்கின்றனர். அப்படி எந்தவொரு விதிமுறையும் இல்லை. ஆனால் மிகவும் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. அதுவும் ஐஸ்கட்டி போல் குளிர்ந்த நீர் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தும்.

அப்படி நடுக்கம் ஏற்பட்டால் உடல் வெப்பத்தை உருவாக்க முயற்சிக்கும். இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே காய்ச்சலின்போது மிகவும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவதற்கு பதிலாக, மிதமான வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அல்லது வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து உடலை துடைத்துக் கொள்வது சிறப்பானது. காய்ச்சலின்போது குளிப்பதை உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் பராமரிப்பு முறையாகவே கருதவேண்டும்.

5 முதல் 10 நிமிடங்களுக்குள் குளித்து முடிக்கவேண்டும். ஒருவேளை குளிர் காரணமாக உடல் நடுங்கத் தொடங்கினால் உடனடியாகக் குளிப்பதை நிறுத்திவிடவேண்டும். அத்துடன், மென்மையான துணியால் உடலை துடைத்துவிட்டு, காற்று புகக்கூடிய மெல்லிய பருத்தி ஆடைகளை அணியவேண்டும்.

குளித்த பிறகு உடல் வறட்சியைத் தவிர்க்கப் போதுமான அளவு தண்ணீர் அல்லது திரவ உணவுகளை உட்கொள்வது நல்லது. குளிக்க செல்லும்போது தலைசுற்றல், சோர்வு போன்ற உணர்வு ஏற்பட்டாலும் குளிப்பதை தவிர்க்கவேண்டும்.

காய்ச்சல் வந்தவுடன் மாத்திரை எடுத்துக்கொள்வது மட்டுமே போதுமானதல்ல. போதுமான ஓய்வு, திரவ மற்றும் சத்தான உணவு, தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவையும் காய்ச்சலில் இருந்து மீண்டு வருவதற்கு உதவும். காய்ச்சலுக்கான காரணத்தை பொறுத்து சிகிச்சையும் மாறுபடும். எனவே வைத்தியர் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் அல்லது மிக அதிகமாக இருந்தால் உடனே வைத்தியரை அணுக வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *