செம்மணிக்கு சர்வதேச நீதி கோரி புலம்பெயர் தமிழர்கள் கிளர்ந்தெழ வேண்டும்

செம்மணி மனித புதைகுழியிக்கு சர்வதேச நீதி கோரி தமிழ் புலம்பெயர் சமூகம் எழுச்சி கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
சமகால நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில்,
தமிழர் தாயகத்தில் மிகப் பெரும் மனிதப் புதைகுழியாக மாறியுள்ள செம்மணிப் புதைகுழி ஒரு இனம் திட்டமிட்ட வகையில் இனவழிப்பு செய்யப்பட்டதற்கு ஒப்பான ஆதாரங்களை வெளிவந்துள்ளன. இதற்கான உண்மையான நீதி ஒருபோதும் உள் நாட்டிற்குள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கோரி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டில் ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தை மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் மூலம் வலுப்படுத்த புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் மக்களும் அமைப்புக்களும் களத்தில் இறங்க வேண்டும்.
கடந்த காலங்களில் பெரும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தியது போன்று இனிவரும் நாட்களிலும் ஐனநாயக போராட்டங்களை அனைத்து நாடுகளிலும் நடாத்த வேண்டும். தாயக மக்களின் கோரிக்கையை பலப்படுத்தும் வகையில் புலம்பெயர் உறவுகள் களத்தில் இறங்குவதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான கதவுகளை திறக்க முடியும்.
செம்மணி விவகாரத்தில் போதுமான ஆதாரங்கள் மற்றும் தடயப் பொருட்கள், தடயங்கள், சாட்சியங்கள், மூல சூத்திரதாரிகள், அதிகாரத் தரப்புக்கள் என பல்வேறு விடயங்கள் வெளிப்படையாக இருக்கும் போது இதனை விசேட கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த முடியும்.
தற்போதைய அநுர அரசின் நகர்வுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு அரசாங்க பிரதிநிதிகள் வழங்கிய கருத்துக்கள் ஆரோக்கியமானதாக இல்லை எனவே சர்வதேச நீதியை வலியுறுத்திய போராட்டங்கள் புலம்பெயர் மக்களால் எழுச்சி கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.
![]()