சத்துருக்கொண்டான் படுகொலை; 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் எழுந்த நீதிக்கான குரல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் அமைந்துள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி வளாகத்தில், சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி மற்றும் சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 186 பொதுமக்கள் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
உயிரிழந்தவர்களில் 85 பெண்களும், 10 வயதுக்குட்பட்ட 42 சிறுவர்களும், 25 வயோதிபர்களும் அடங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினர், முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் ஒட்டுக்குழுவினர் ஈடுபட்டதாக நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், மாநகர சபை உறுப்பினர் ரகுநாதன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அருட்தந்தை க.ஜெகதாஸ், கண்டுமணி லவகுகராசா, எஸ்.சிவயோநாதன், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி மற்றும் சத்துருக்கொண்டான் பகுதிகளில் உறவுகளை இழந்தவர்களால் பிரதான ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அகவணக்கமும் இடம்பெற்றது.
இதேவேளை, சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும், அப்போது சத்துருக்கொண்டானில் அமைந்திருந்த இராணுவ முகாம் பகுதியில் அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கான மகஜரும் நிகழ்வின்போது வாசிக்கப்பட்டு, உரிய தரப்பினரிடம் கையளிக்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
![]()