ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு : சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினார் மைத்திரி

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு அளித்தமை செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று(20) தீர்ப்பளித்த அதேவேளை இந்த மன்னிப்பை அளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட பல தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர், நீதிபதிகள் சம்பத் அபேகோன் மற்றும் சோபிதா ராஜகருணா ஆகியோர் உடன்பட்ட 58 பக்கத் தீர்ப்பை, நீதிபதி ஜனக் டி சில்வா இன்று வழங்கினார்.
இது தொடர்பில் நீதிபதி தெரிவித்தவை வருமாறு,
எவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்
“முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (சட்டம்) சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.

மகாநாயக்க தேரர்கள், தியவதன நிலமே மற்றும் பிற மதத் தலைவர்களும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக் கோரியிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 34(1) பிரிவின்படி, ஜனாதிபதி தனக்கு அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும். இருப்பினும், இந்த வழக்கில், இந்த பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்கியதற்கான காரணங்களை ஜனாதிபதி விளக்கத் தவறிவிட்டார்.
எனவே, அரசியலமைப்பின் 12(1) பிரிவால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமையை ஜனாதிபதி மீறியுள்ளார் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.”
மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி பிரதிவாதி ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்கினார். வணக்கத்திற்குரியவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு,சட்டத்தின்படி நீதிமன்றத்தின் பார்வையில் செல்லாதது மற்றும் பயனற்றது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இருப்பினும், மேலதிக செயலாளர் (சட்டம்) சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த மன்னிப்பை வழங்கியுள்ளதால், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் மேலும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தெரிவித்துள்ளார்.
![]()