இந்தியாவுடன் கையெழுத்தான உடன்படிக்கைகளில் ”சந்தேகம்”

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் சந்தேகங்கள் நிலவுகின்றன. இதனால் அந்த உடன்படிக்கைகள் மற்றும் எட்டப்பட்ட உடன்பாடுகள் தொடர்பான உண்மையான விடயங்களை நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னிலை சோஷலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது
முன்னிலை சோஷலிசக் கட்சியினால் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அந்தக் கட்சியின் கல்விச் செயலாளரான புபுது ஜயகொடவே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இங்கு புபுது ஜயகொட மேலும் தெரிவிக்கையில்,
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, உண்மையில் கையெழுத்திட்ட உடன்படிக்கைகள் மற்றும் உண்மையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். கேடட் பயிற்சி, பாதுகாப்பு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இந்தியாவினால் வழங்கப்பட்ட ஆயுதங்களை இலவசமாக பராமரித்தல் போன்ற உடன்படிக்கைகளே கையொப்பமிடப்பட்டதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் அது குறித்து நியாயமான சந்தேகம் எழுகிறது. இந்தியா போன்ற சக்திவாய்ந்த ஒரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர், இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் அல்லது சாதாரண அரச அதிகாரிகளால் கையொப்பமிடப்படக்கூடிய இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக மட்டும் இலங்கைக்கு வந்திருக்க முடியாது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகே இலங்கைக்கு வருகை தருகிறார். இதற்கு முன்னர் அன்றைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே. சி. பாண்ட் 1988 இல் இலங்கைக்கு வந்திருந்தார். அது இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டு, மிகவும் சிக்கலான சூழ்நிலை நிலவிய போது அது குறித்து கலந்துரையாடுவதற்காகவே ஆகும். கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு இம்முறை பாதுகாப்பு அமைச்சர் வருவது கேடட் பயிற்சி பற்றியோ அல்லது இராணுவ ஆயுத பராமரிப்பு பற்றியோ பேசுவதற்காக இருக்க முடியாது. உண்மையில் என்ன கலந்துரையாடப்பட்டது, உண்மையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் என்ன என்பதை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இதற்கு முன்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 2025 ஜனவரியில் இந்தியாவிற்கான விஜயத்தின் போது பல உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டிருந்தார். அவை என்னவென்று மக்களுக்கு இன்னும் தெரியாது.
2025 ஏப்ரல் 5 ஆம் திகதி இந்தியாவுடன் ஏழு உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டன. அவற்றின் பிரதிகள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. அந்த ஏழு உடன்படிக்கைகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையும் ஒன்றாகும். அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் மேலும் விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பில் கையொப்பமிடுவதற்காகவே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகை தருகிறார் என்று முன்னர் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அரசாங்கம் இவை அனைத்தையும் மக்களிடம் மறைக்கிறது.
2025 ஏப்ரல் 5 ஆம் திகதி இந்தியாவுடனும், 2025 செப்டம்பர் 26 ஆம் திகதி ஜப்பானுடனும், 2025 நவம்பர் 14 ஆம் திகதி அமெரிக்காவுடனும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டன. இந்த மூன்று நாடுகளும் ஆசியாவின் நேட்டோ என அழைக்கப்படும் குவாட் இராணுவக் கூட்டமைப்பின் நான்கு பங்காளிகளில் மூன்றாகும். இதன் மூலம் இலங்கை ஆசியாவின் நேட்டோவுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புக்கு உடன்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. இலங்கை வரலாற்று முதன்முறையாகவே இவ்வாறானதொரு உடன்பாட்டிற்கு வருகிறது. ஆசியாவின் நேட்டோவோடு நிறுத்தாமல் பிரதான நேட்டோ அமைப்பிலேயே இலங்கையை பிணைத்துவிட்டார்களா? இந்த அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையானது இலங்கையை ஒரு பூகோள அரசியல் பொறியில் சிக்க வைக்கும் அபாயம் உள்ளது என்றார்.
![]()