கோத்தபாய கைதில் ஏன் தாமதம்?

எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்களை எமது மக்களின் அவலக் குரல், செம்மணியில் மக்களை புதைக்கும் போது அவர்கள் பட்ட வேதனைகள், முள்ளிவாய்க்காலில் தாய், தந்தை கண் முன்னே சூடுபட்டு விழுகின்ற போது, அந்த மக்களின் அழுகுரல் இன்று கர்மா என்ற ரீதியில் விரட்டத் தொடங்கியுள்ளது எனத்தெரிவித்த ஜனநாயக தமிழ்தேசியக்கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன்,சந்தேக நபரான கோதாபய ராஜபக்ஷவை கைது செய்வதில் ஏன் தாமதமாகின்றது கேள்வியையும் எழுப்பினார்
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் எமது காணாமல் போனவர்கள், எமது இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் செம்மணி புதைகுழி போன்ற விடயங்களில் விசாரணை நடத்தப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஐ.நா.வும் இலங்கை அரசாங்கத்திற்கு உரிய செயற்பாடுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். அத்துடன் உள்ளக விசாரணையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனையும் கூறிக்கொள்கின்றோம்.
கடந்த காலங்களில் 25 வருடங்களுக்கும் மேலாக அரசியல் கைதிகள் இருக்கின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக போராளிகளின் படங்களை வைத்திருப்பதாக கூறி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இன்றும் சிறையில் வாடுகின்றனர். எங்களுடைய தாய், தந்தை உறவுகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பது இன்று மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு உணர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் கடந்த காலங்களில் எங்களுடைய இனத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் வெற்றிவாகை சூடியவர்களாக இருந்தாலும் அந்த தாய், தந்தைகளின் உணர்வு எப்படி இருக்கும் என்பது தற்போது இவர்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றோம். ஊழல் தொடர்பாக கைது செய்யப்படுகின்றவர்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் யார், எவரென்று பார்க்காமல் நீங்கள் உங்களின் கைதுகளை செய்ய வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பல சந்தேக நபர்கள் இருக்கின்றனர். அவர்களை ஏன் கைது செய்யாமல் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள்? எமது இனத்தை இல்லாதொழிக்க நினைத்த, மனித உரிமைகளை மீறியுள்ளவர்களாக கருதப்படுகின்றனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு நாட்டின் பொருளாதாரத்தை கீழே கொண்டு சென்றவர்களாக ராஜபக்ஷக்களை நீதிமன்றம் கூறியுள்ளது.சந்தேக நபரான கோதாபய ராஜபக்ஷவை கைது செய்வதில் ஏன் தாமதமாகின்றது என்று தெரியவில்லை?மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம். இந்த விசாரணைகளை சர்வதேச அனுசரணையுடன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இதேவேளை கர்மா என்பதனை நான் நம்புவதில்லை. ஆனால் கர்மா என்பது இருக்கின்றது என்பதனை உணரக்கூடியதாக உள்ளது. எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்கள் எமது மக்களின் அவலக் குரல், செம்மணியில் மக்களை புதைக்கும் போது அவர்கள் பட்ட வேதனைகள், முள்ளிவாய்க்காலில் தாய், தந்தை கண் முன்னே சூடுபட்டு விழுகின்ற போது, அந்த மக்களின் அழுகுரல் இன்று கர்மா என்ற ரீதியில் செயற்படத் தொடங்கியுள்ளது. தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த வகையில் அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போது எமது ஆதரவு இருக்கும் என்பதனை கூறிக்கொள்கின்றோம்.
ஐ.நா. சபை தமது கருத்துக்களை ஆழகமாக கூறினாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை ஐ.நா. சபை இறுக்கமாக கொள்ளவில்லை. ஐ.நா. மீது எமது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அது இழந்துகொண்டு வருகின்றது. வெறும் வார்த்தைகயை அறிக்கைகளை விடாமல் அதனை நடைமுறைப்படுத்தும் சகல விடயங்களையும் அது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதுடன், இந்த அரசாங்கம் உள்ளக விசாரணையை நிறுத்தி சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் அடிப்படையை உருவாக்க வேண்டும். இதன்மூலமே நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் நீதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.
![]()