13 ஆம் திகதி மக்கள் பேரணிக்கு அனைவரும்அணி திரள வேண்டும்; தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு

குற்றமிழைத்த தரப்பாக உள்ள இலங்கை அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தில் எதிர்வரு 13 ஆம் திகதி இடம்பெறவுள்ள பேரணியில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியப் பேரவைஅழைப்பு விடுத்துள்ளது
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அழைப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது,
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன. இந்த சான்றுப் பொருட்களானவை மேற்படி குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதானது, அவற்றை சேதப்படுத்தி குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக்கூடிய கூடிய ஆபத்துள்ளது.
எனவே குற்றமிழைத்த தரப்பாக உள்ள இலங்கை அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல் அகழ்தெடுக்கப்படும் தடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டடு விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
உடனடியானதும் அவசரமானதுமான இக் கோரிக்கை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி 13 ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலத்திற்கு அருகாமையில் உள்ள கைலாசபிள்ளையார் கோவில் முன்றிலில் ஆரம்பமாகவுள்ள மாபெரும் பேரணிக்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.தமிழ்த் தேசியப் பேரவையும் குடிசார் அமைப்புக்களும் இணைந்து முன்னெடுக்கவுள்ள இப்பேரணியில் அனைத்து குடிசார் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், கல்வி மற்றும் உயர் கல்விச் சமூகத்தினர் மற்றும் தமிழ்த் தேசிய கட்சிகளையும், அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.
![]()