இலங்கை

சத்துருக்கொண்டான் ,வந்தாறுமூலை படுகொலைகளுக்கு நீதி வேண்டும்;  ஸ்ரீ நேசன் எம்.பி. வலியுறுத்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் 36 ஆண்டுகளுக்கு முன் இடம் பெற்றுள்ள படுகொலைகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஸ்ரீ நேசன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்புப் படைகளில் தலைமை அதிகாரி பதவி நீக்கம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்

இன்றைய (நேற்றைய) தினம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மறக்க முடியாத ஒரு கறை படிந்த நாள் . அந்த வகையில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் 90 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி மட்டக்களப்பு சத்துருக்கொன்டானில் இருந்த இராணுவ முகாமிற்கு கொக்குவில், பிள்ளையாரடி உள்ளிட்ட அப்பகுதியில் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக அழைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு வயதிற்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளடங்குவர். பத்து வயதுக்கு உட்பட்ட வர்கள் 40 பேர். பெண்கள் 85 பேர். அதனைத் தவிர வயது முதிர்ந்தவர்கள் 28 பேர். அதனோடு மேலும் 25 பேராக மொத்தமாக 186 பேர் போய்ஸ் டவுன் என்று சொல்லப்படுகின்ற அந்த முகாமில் வைத்து அன்றைய தினம் அத்தனை பேரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரே ஒருவர் மாத்திரம் கடுமையான காயங்களுடன் தப்பியுள்ளார். அவர்தான் கிருஷ்ணகுமார். அவர் இப்போதும் அயல்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அதேபோன்று இன்னும் ஒருவர் அந்த சம்பவத்தை பற்றை மறைவிலிருந்து பார்த்தவர் என்று அறியப்படுகிறது. அவர் வைரமுத்து குழந்தை வடிவேல் என்பவர். அவரோடு மேலும் சிலரும் பற்றைகளுக்குள் மறைந்திருந்து இந்த சம்பவத்தை பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் அந்த முகாமில் இருந்த படையினரும் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்படி 186 பேரையும் படுகொலை செய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்தபோது ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்திரு ந்தார். அந்த ஆணைக்குழு மூலம் சில உண்மைகள் வெளிக்கொணரப்பட்டிருந்தன. கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரம் கூட அதன் போது அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த இராணுவ முகாமிற்கு காமினி வர்ணகுல சூரிய என்பவரே பொறுப்பாக இருந்துள்ளார்.

36 ஆண்டுகள் கடந்தும் இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மக்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு ஆணைக்குழுவை அமைத்திருந்தாலும் அந்த விசாரணை முடிவடைவதற்கு முன்பாக செம்மணியில் மேலும் 600க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அங்கு தற்போது 584 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி வந்தாறுமூலை அகதி முகாமிலிருந்து 174 இளைஞர்களை கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள். அவர்களில் ஒருவரும் இதுவரை திரும்பவில்லை. அவர்கள் காணாமற் போனவர்களாக உள்ள நிலையில் அவர்கள் நாவலடி அல்லது கிண்ணையடி பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்டோரை கைது செய்வதை நாம் வரவேற்கின்றோம்.அந்த வகையில் 36 ஆண்டு காலமாக நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நீதி கிடைக்க சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *