இலங்கை

நாமல் கைதானதில் எந்த தவறும் இல்லை; வாசுதேவ நாணயக்கார கூறுகின்றார்

நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்திருப்பதை அரசியல் பழிவாங்கலாகவோ அல்லது அரசாங்கம் தவறிழைத்துள்ளதாகவோ கூற முடியாது. ஆனால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைத்திருந்தாலே அதனை நாங்கள் தவறு என்று கூறலாம் என்று முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் மக்களின் கஷ்டங்கள் அதிகரிக்கும் வரையில் எதிர்க்கட்சியினர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.அதனை தமது அரசியல் துருப்பாக பயன்படுத்தி இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்களை திசை திருப்பவே எதிர்பார்க்கின்றனர். இதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வலதுசாரி எதிர்க்கட்சியினர் மீண்டும் தமக்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக வழியையே மோப்பம் பிடிக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்களை பார்க்கும் போது அரசாங்கத்திற்கு ஏற்படும் தவறுகள் தொடர்பில் அவருக்கு மகிழ்ச்சியே ஏற்படுகின்றது. இதுவே அரசாங்கத்தின் சூழ்ச்சி வழியாகும். இவ்வாறு ஏற்படாத வகையில் அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் மற்றும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை இப்போது ஜென்சீ தலைமுறையினர் (புதிய நூற்றாண்டுத் தலைமுறை) குழப்பமடைந்திருந்தால் அதற்கான காரணமாக பாரிய மக்கள் அதிகாரத்தின் மூலம் அமைக்கப்பட்ட இந்த அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சியான வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மீண்டும் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டங்களுக்கு தயாராவது தொடர்பிலேயே குழப்பமடைந்திருக்கலாம். அதனை விடுத்து நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்தமைக்காக அல்ல.

நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றத்தினாலேயே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த விடயத்தில் எதிர்ப்புகள் இருக்குமாக இருந்தால் நாமல் ராஜபக்‌ஷ அடங்கலாக எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பாகவே இருக்கும். அதன்படி அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் ஜென்சீ தலைமுறையினர் குழப்பமடையவில்லை.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்தால் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை தவறாகும். ஆனால் ஏதேனும் விடயத்தால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்றம் ஊடாக வழக்கு விசாரணைகளை தொடர்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
அரசியலில் எதிர்த் தரப்பாக இருப்பதன் காரணமாக ஏதேனும் முறையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதை அரசியல் பழிவாங்கலாக கூறலாம். ஆனால் ஏதேனும் காரணத்திற்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சட்ட ரீதியாக அரசாங்கத்திற்கு இருக்கும் பொறுப்பை சட்ட ரீதியான பொறுப்பை எங்களால் புறந்தள்ள முடியாது. எதிர்காலத்தில் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பை பொறுத்தே அது எவ்வாறான செயற்பாடு என்று கூற முடியும் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *