சர்வ வல்லமையும் கொண்டவர்கள் தமிழர்களின் காணிகளை விடுவிக்க தயங்குவது ஏன்.? ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் கேள்வி!

மாற்றான் தாய் மனநிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை இந்த அரசாங்கம் கையாளக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமாயின் அதற்கான போராட்டங்கள் வலுவாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வலி வடக்கு மயிலிட்டிப் பகுதியில் பிரதேச மக்களினால் நேற்று (04.09.2026) முன்னெடுக்கப்பட்ட 20 ஆவது வாரப் போராட்டத்தில்; கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும்,”‘மயிலிட்டி மக்கள் தங்களுடைய காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாக 20 ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ச்சியான இவ்வாறான போராட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு அழுத்தமாக அமைந்திருக்கின்றது என்பதை அவர்கள் வெளிப்படுத்துகின்ற கருத்துக்கள் ஊடக அறிக்கூடியதாக இருக்கின்றது.
எனினும் எமது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்பட வில்லை.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 160 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு நேற்று உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போதைய அரசாங்கம் சர்வ வல்லமையும் கொண்டவர்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
அதாவது, தாங்கள் விரும்பிய அனைத்தையும் செய்ய முடியும், தேவைப்படின் புதிய சட்டங்களை உருவாக்க முடியும், தேவையென்றால் அரசியலமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்த முடியும் என்றெல்லாம் தெரிவித்திருக்கின்றார்.
உண்மைதான், பெரும்பான்மை பலத்தினைக் கொண்ட நாடாளுமன்றத்தினையும் நிறைவேற்று அதிகாரத்தினையும் தமது கைகளில் வைத்திருக்கின்ற தற்போதைய அரசாங்கம் விரும்பியதை நிறைவேற்றக் கூடிய பலம் மிக்கதாக இருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் தங்களுடைய பலத்தை பயன்படுத்தாத நிலையே காணப்படுகின்றது.
இது தமிழ் மக்களின் பிரச்சினைகள இந்த அரசாங்கம் மாற்றாந்தாய் மனநிலையில் கையாளுகின்றது என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் எமது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமாயின் இவ்வாறான போராட்டங்கள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். இந்தப் பிரதேசத்தில் காணி உரிமையாளர்கள் மாத்திரமன்றி அனைத்து மக்களும் இவ்வாறான போராட்டங்களில் கலந்து கொண்டு போராட்டத்தினை வலுப்படுத்தினால், அது அரசாங்கத்திற்கு அதிகளவிலான அழுத்தத்தினை உருவாக்கும்.
காணி விடுவிப்பு தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து காணிகளை விடுவிக்க வேண்டிய நிலையை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.
![]()