மரணத்தின் வாசிப்பு… கவிதை… முல்லைஅமுதன்

உடலைத்
தரையில் கிடத்திருந்தார்கள்.
வரிசையாக பூக்களையும்,
மலர்வளையங்களையும்
சுற்றி பரப்பியிருந்தார்கள்.
ஐயரின்
மந்திர உச்சாடனம் ஒலித்தது.
அறையெங்கும்
புகைமண்டலம்.
குழந்தைகள்
எதுவித சலனமுமின்றி
சத்தமிட்டு ஓடித்திரிந்தபடி இருந்தனர்.
ஒரு குழந்தையை மட்டும்
தாய் அடக்கிவைத்தாள்.
இன்றுதான்
முதன்முதலாய் அழுவது போலிருந்தனர் சிலர்.
ஏற்கனவே
பயிற்சியெடுத்திவிட்டு ஒப்பாரிவைத்தழுதனர்.
தூரத்தே
யாரோ ஒரு பெண் சோகமாய் நின்றிருந்தாள்.
இழப்பின் வலி முகத்தில் தெரிந்தது.
இன்னும்
சில நிமிடங்களில் எரியூட்டி விடப்போகிறார்கள்.
மனக்கண்களை
அகலவிரித்து பார்த்தேன்.
இதுவரை யாரும்
சிவபுராணம் தவிர்த்து
என் கவிதைகளை வாசிக்கவேயில்லை..
தணலில் எரிந்துகொண்டிருந்தேன்.
2)
விடியவில்லை.
கண்விழித்து
உற்றுப்பார்க்கமுடியாதபடி
கண்களில் தூக்கம் கலைந்திருக்கவில்லை.
வேலிக்கப்பாலிருந்து
மாணிக்காச்சி
தன் பேரனுக்காக சமையல்
செய்துகொண்டிருந்த
வாசம் மூக்குள் நுழைந்து.
பசியெடுப்பது போல உணர்வு என்னுள்.
வல்லிபுர மாமா சந்தைக்குப் புறப்பட்டிருக்கவேண்டும்
அவரின்
மிதிவண்டியின் ‘க்ரீச்’ ஒலி அருகில் கேட்டது.
அப்பா
வயலுக்குப் புறப்பட ஆயத்தமாகிறார்.
அம்மா
அடுப்பை மூட்டி
தேநீர் தயாரிக்க முனைகிறாள்..
வீடும்
பரபரப்பாக ஆயத்தமாகிறது.
இன்னும் விடியவில்லை
தூக்கம் இன்னமும்
கலையாத அசதியுடன்
வேலி
அருகில் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கிறேன்.
![]()