முச்சந்தி

கிழக்குத் திமோர் பொருளாதார நெருக்கடி: அவுஸ்திரேலியா உண்மையில் உதவுகிறதா ?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஐங்கரன் விக்கினேஸ்வரா

தென்கிழக்காசியாவின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான கிழக்குத் திமோர் (East Timor) 2002ஆம் ஆண்டு இந்தோனேசியாவிடமிருந்து முழுமையான சுதந்திரத்தைப் பெற்ற பின்னர், பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகிறது. 2025ஆம் ஆண்டு அது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பில் முழு உறுப்பினராக இணைந்தது. இது நாட்டின் சர்வதேச ஒருங்கிணைப்பில் வரலாற்றுச் சாதனையாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக கிழக்குத் திமோர் இன்னும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வருவாயை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மாதிரி தற்போது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. Bayu-Undan எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் உற்பத்தி 2025ஆம் ஆண்டில் முடிவடைந்துள்ளதால், கிழக்குத் திமோர் எதிர்காலத்தில் தனது அரசுச் செலவுகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் எவ்வாறு நிதியளிக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாகியுள்ளது என உலக வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில் கிழக்குத் திமோர் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது; அவுஸ்திரேலியா எவ்வித உதவியும் செய்யவில்லை என்ற விமர்சனம் எழுகிறது. ஆனால் இந்தக் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு முன், அவுஸ்திரேலியா வழங்கும் உதவியின் அளவு, இரு நாடுகளுக்கிடையிலான எண்ணெய்–எரிவாயு அரசியல், Greater Sunrise திட்டம் மற்றும் கிழக்குத் திமோரின் சொந்த பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிய வேண்டும்.
எண்ணெய் வருவாய் பொருளாதாரம்
கிழக்குத் திமோரின் பொருளாதாரத்தின் அடிப்படைப் பிரச்சினை அதன் மிகக் குறுகிய உற்பத்தித் தளமாகும். பல ஆண்டுகளாக எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் அரசின் முக்கிய நிதி ஆதாரமாக இருந்தது. அந்த வருவாயில் பெரும்பகுதி பெட்ரோலிய வளம் (Petroleum Fund) எனப்படும் இறையாண்மைச் செல்வ நிதியில் சேமிக்கப்பட்டது. இந்த நிதி கிழக்குத் திமோரின் மிகப்பெரிய பொருளாதாரச் சொத்தாக மாறியுள்ளது.
2025 ஜூன் நிலவரப்படி பெட்ரோலிய வளத்தில் சுமார் 18.74 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் பத்து மடங்காகும். எனவே கிழக்குத் திமோர் “பணம் இல்லாத நாடு” என்று கூறுவது துல்லியமானதல்ல. உண்மையான பிரச்சினை, அந்தச் சேமிப்பை எவ்வாறு நீண்டகால பொருளாதார வளர்ச்சியாக மாற்றுவது என்பதுதான்.
ஆனாலும் தீமோரில் ஏன் நெருக்கடி உருவாகிறது என்பதற்கு பல காரணிகள் இருக்கின்றன. பெட்ரோலிய வளம் மிகப்பெரியதாக இருந்தாலும், அரசாங்கம் கடந்த பல ஆண்டுகளாக அதிலிருந்து அதிகளவில் பணம் எடுத்துச் செலவிட்டுள்ளது. 2014 முதல் 2024 வரையிலான காலத்தில் அரசுச் செலவு ஆண்டுக்கு சராசரியாக 5.3 % வீதம் அதிகரித்ததாக உலக வங்கி கூறுகிறது. அதே காலகட்டத்தில் அரசுச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி 85.3 % வீதம் விழுக்காடாக இருந்தது. இதுவே கிழக்கு தீமோரின் பொருளாதாரத்தின் அடிப்படைச் சிக்கலை வெளிப்படுத்துகிறது.
எண்ணெய் வருவாய் குறைந்துவிட்டால், அதே அளவிலான அரசுச் செலவுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாது. உள்நாட்டு வரி வருவாய் குறைவாக உள்ளது. தனியார் துறை பலவீனமாக உள்ளது. ஏற்றுமதிகள் மிகவும் குறைவு. உணவு, எரிபொருள், இயந்திரங்கள் மற்றும் பல அத்தியாவசிய பொருட்களுக்கு நாடு இறக்குமதியைச் சார்ந்துள்ளது.
இதனால் எண்ணெய் வருவாயிலிருந்து சேமித்த பணத்தை செலவு செய்து கொண்டிருக்கும் பொருளாதார மாதிரி நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்காது. உலக வங்கி எச்சரிப்பதுபோல், குறிப்பிடத்தக்க நிதிச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் பெட்ரோலிய வளம் 2038ஆம் ஆண்டளவில் தீர்ந்துபோகும் அபாயம் உள்ளது.
ஆஸி உதவுகிறதா அல்லது சுரண்டுகிறதா ?
அவுஸ்திரேலியா கிழக்குத் திமோருக்கு உதவவில்லை என்று கூறுவது உண்மைக்கு மாறானது. கிழக்குத் திமோரின் மிகப்பெரிய அபிவிருத்திப் பங்காளியாக அவுஸ்திரேலியா தொடர்கிறது. அவுஸ்திரேலிய அரசின் தற்போதைய தரவுகளின்படி, 2025–26 நிதியாண்டில் கிழக்குத் திமோருக்கான மொத்த அதிகாரபூர்வ அபிவிருத்தி உதவி சுமார் 135.9 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026–27ஆம் ஆண்டுக்கான மொத்த உதவி சுமார் 146.6 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி கல்வி, சுகாதாரம், நிறுவன வலுப்படுத்தல், பொருளாதாரப் பல்வகைப்படுத்தல், சமூகத் தாங்குதிறன் மற்றும் தனியார் துறை வளர்ச்சி போன்ற பல துறைகளில் வழங்கப்படுகிறது. எனவே அவுஸ்திரேலியா ஒன்றுமே செய்யவில்லை என்பது உண்மை அல்ல. ஆனால் இதன் மூலம் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அவுஸ்திரேலியாவின் உதவி கிழக்குத் திமோரின் மிகப்பெரிய நீண்டகால பொருளாதாரப் பிரச்சினைக்கு போதுமானதா இதற்கு பதில் மிகவும் சிக்கலானதாகவே இருக்கிறது.
Greater Sunrise – பொருண்மிய மையம்
கிழக்குத் திமோருக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவில் மிகவும் முக்கியமான பிரச்சினை Greater Sunrise இயற்கை எரிவாயுத் திட்டமாகும். கிழக்குத் திமோரின் தெற்குக் கடற்பரப்புக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் சுமார் 5.1 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கிழக்குத் திமோரின் தேசிய எண்ணெய் நிறுவனமான TimorGAP பெரும்பான்மைப் பங்கைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாக உள்ளது.
கிழக்குத் திமோர் தனது தெற்கு கடற்கரையில் இயற்கை எரிவாயுவைச் செயலாக்கும் LNG தொழிற்சாலையை உருவாக்க விரும்புகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் நீண்டகால அரச வருவாய் உருவாகும் என்று அது நம்புகிறது. மறுபுறம், எரிவாயுவை அவுஸ்திரேலியாவின் டார்வின் பகுதிக்கு கொண்டு சென்று செயலாக்குவது பொருளாதார ரீதியாகச் சாத்தியமானதாக இருக்கலாம் என்ற கருத்தும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுவே இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார விவாதத்தின் முக்கிய அம்சமாகும்.
2026இல் புதிய முன்னேற்றம்
இருப்பினும், அவுஸ்திரேலியா உதவவே இல்லை என்ற கருத்தை 2026ஆம் ஆண்டின் சமீபத்திய முன்னேற்றங்கள் சிக்கலாக்குகின்றன.
2026 ஜனவரியில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பனீசி கிழக்குத் திமோருக்கு விஜயம் செய்தபோது, இரு அரசுகளும் Greater Sunrise திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளியிட்டன. திட்டத்தை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்பதில் இரு நாடுகளும் உடன்பட்டன.
மேலும், எதிர்கால Greater Sunrise அரச வருவாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பங்கில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியை கிழக்குத் திமோருக்கான உள்கட்டமைப்பு நிதிக்கு வழங்கும் திட்டத்தையும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இது முக்கியமான மாற்றமாகும். எனினும், Greater Sunrise திட்டம் இன்னும் முழுமையான உற்பத்தி நிலைக்கு வந்துவிடவில்லை. வர்த்தக ரீதியாகச் சாத்தியமான திட்ட வடிவமைப்பு, LNG செயலாக்கம், முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளது.
கிழக்குத் திமோரின் பொருளாதார நெருக்கடியை முழுவதுமாக அவுஸ்திரேலியாவிடம் சுமத்துவதும் சரியான அணுகுமுறை அல்ல. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இரண்டும் ஒரே முக்கியமான கருத்தை முன்வைக்கின்றன. பெட்ரோலிய வளம் உள்ள பணத்தைச் சிறப்பாகவும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்தி, எண்ணெய் சாராத பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். வேளாண்மை, சுற்றுலாத்துறை, உற்பத்தித் தொழில், மீன்பிடி, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்.
குறிப்பாக நில உரிமை மற்றும் நிலப் பதிவு தொடர்பான சிக்கல்கள் தனியார் முதலீட்டுக்கு தடையாக இருப்பதாக உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது. அதேபோல், நாட்டின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியம்.
ஆசியான் உறுப்புரிமை வாய்ப்பு
2025ஆம் ஆண்டு ஆசியான் உறுப்பினராக இணைந்திருப்பது கிழக்குத் திமோருக்கு புதிய பொருளாதார வாய்ப்பை உருவாக்குகிறது. இது இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிற ஆசியான் நாடுகளுடன் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டை அதிகரிக்க உதவக்கூடும்.
உலக வங்கியின் 2026 பொருளாதார அறிக்கையும் ஆசியான் உறுப்புரிமையை கிழக்குத் திமோரின் பொருளாதார மாற்றத்திற்கான முக்கிய வாய்ப்பாகக் குறிப்பிடுகிறது. எனவே எதிர்கால பொருளாதாரத் திட்டம் வெறுமனே அவுஸ்திரேலியா இன்னும் அதிக பணம் கொடுக்க வேண்டும் என்பதாக இருக்க முடியாது. ஆசியான் சந்தைகளுடன் ஒருங்கிணைப்பு, தனியார் முதலீடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி ஆகியவை முக்கியமாக வேண்டும்.
அவுஸ்திரேலிய பொறுப்பு
அவுஸ்திரேலியாவுக்கு கிழக்குத் திமோர் மீது வரலாற்று, புவியியல் மற்றும் அரசியல் பொறுப்பு உள்ளது. இந்தோனேசிய ஆக்கிரமிப்புக்கு எதிரான கிழக்குத் திமோரின் நீண்டகால போராட்டத்தில் அவுஸ்திரேலிய மக்களிடையேயும் ஆதரவு இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு அவுஸ்திரேலிய அமைதிப்படை கிழக்குத் திமோரின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றியது.
இன்று சீனாவின் பிராந்திய செல்வாக்கு அதிகரிக்கும் நிலையில், கிழக்குத் திமோரின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைத்தன்மை அவுஸ்திரேலியாவின் சொந்த தேசிய பாதுகாப்புக்கும் முக்கியமானதாகிறது. 2026 ஜனவரி விஜயத்தின் போது பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் புதிய கூட்டாண்மையையும் இரு நாடுகளும் முன்னெடுத்தன. எனவே கிழக்குத் திமோர் வலுவான பொருளாதார நாடாக மாறுவது அவுஸ்திரேலியாவுக்கும் நன்மை தரும்.
கிழக்குத் திமோரின் தற்போதைய பொருளாதார நிலை, உண்மையில் அவுஸ்திரேலியா கிழக்குத் திமோரின் மிகப்பெரிய அபிவிருத்திப் பங்காளியாகத் தொடர்கிறது. கல்வி, சுகாதாரம், நிறுவன வளர்ச்சி மற்றும் பொருளாதாரப் பல்வகைப்படுத்தலுக்காக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஆனால் அதே நேரத்தில், கிழக்குத் திமோர் எதிர்கொள்ளும் அளவிலான பொருளாதார மாற்றத்திற்கு வெறும் அபிவிருத்தி உதவி போதாது. Greater Sunrise போன்ற இயற்கை வளத் திட்டங்களை நியாயமான மற்றும் இரு தரப்புக்கும் பயனளிக்கும் வகையில் முன்னெடுப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, தனியார் முதலீட்டை ஈர்ப்பது, உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் பொருளாதாரத்தை எண்ணெயிலிருந்து வேளாண்மை, சுற்றுலா, உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளுக்கு மாற்றுவது அவசியமாகிறது.
கிழக்குத் திமோரிடம் மிகப்பெரிய பெட்ரோலிய வளம் உள்ளது. ஆனால் அந்தச் செல்வம் முடிவில்லாதது அல்ல. அதேவேளை அவுஸ்திரேலியாவிடம் தொழில்நுட்பம், முதலீடு, சந்தை அணுகல் மற்றும் பிராந்திய செல்வாக்கு உள்ளது.
கிழக்குத் திமோரின் பொருளாதார எதிர்காலம் அதன் பெட்ரோலிய வளத்தில் எவ்வளவு பணம் மீதமுள்ளது என்பதிலேயே இல்லை. அந்தச் செல்வத்தை மனித மூலதனம், கல்வி, உற்பத்தி, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் தனியார் தொழில்முனைவாக மாற்றும் திறனில்தான் அதன் உண்மையான எதிர்காலம் இருக்கிறது. அந்த மாற்றத்தில் அவுஸ்திரேலியா ஒரு வெளிப்புற உதவி வழங்குநராக மட்டும் இல்லாமல், நீண்டகால பொருளாதாரப் பங்காளியாக செயல்பட வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button