செயல் ஒன்று தொழில் வேறு!…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

அறுவைசிகிச்சை செய்வதோ நோய்தீர்த்து உயிர்காக்க
இறைச்சியறுவை செய்வதும் உண்பதற்கு உணவாக்க
படிப்பும் அனுபவமும் அறுவை சிகிச்சைக்குதவுமெனில்
இரண்டும் அல்ல ஒன்று உதவும் இறைச்சியறுவைக்கு
குழுவாகச் சேர்ந்தங்கு சிகிச்சை செய்வார் சீருடையுடன்
குழுவாகவும் தனியாகவும் இறைச்சியறுப்பர் சீருடையில்
கூரான ஆயுதங்கள் வேண்டும் இருவருக்கும் தொழிலில்
கூடவே வேண்டும் மனோதிடமும் சகிப்புத் தன்மையுமே
இருவர் தொழிலும் இரத்தமும் சதையுடன்தான் எந்நாளும்
ஒரு தொழிலில் இரத்தம் பொங்கும் மற்றதிலது உறையும்
இறந்த உடலில் நிபுனர் செய்தால் அது பிரேதபரிசோதனை
இறந்த உடலில் அறுவை செய்தாலதுவே இறைச்சியறுவை
தொழிலில் உயர்வென்றும் தாழ்வென்றும் சிலர் சொல்வர்
ஒன்று உயிர் காக்குமென்றால் மற்றதோ உயிர்க்குணவாகும்
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்றது குறள்
ஒரே தொழிலில் வேற்றுமை சிறப்பொவ்வா என்பதே பொருள்
சாதிகள் இல்லை தாழ்த்தி உயர்த்துவது கூடாதென்றிடுவார்
புதிதாகச் சொல்வாரே தொழிலில் உயர்வு தாழ்வு உண்டென்று
நெஞ்சு பொருக்குதில்லையே என்றான் நம் பாரதியும் அன்று
நெஞ்சு பொருக்கலையே நிலைகெட்ட மனிதரை நினைத்தின்று
![]()