பலதும் பத்தும்

‘ஜீரோ-கிளிக்’ வட்ஸ்அப் தாக்குதல் – ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை

ஊடக மற்றும் வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்ட பலரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘ஜீரோ-கிளிக்’ வட்ஸ்அப் கணக்கு அபகரிப்புத் தாக்குதல் தொடர்பில் இலங்கை கணினி அவசரத் தயார்நிலை அணியினர் நாட்டிலுள்ள ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இலங்கை கணினி அவசரத் தயார்நிலை அணியின் தகவலின்படி, ஐ.ஓ.எஸ். 16 இன் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களை இந்தத் தாக்குதல் இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம், பயனரின் எந்தவொரு நடவடிக்கையும் இன்றி தாக்குதலாளர்கள் வாட்ஸ்அப் கணக்குகளை அணுகக்கூடிய நிலை ஏற்படலாம்.

 

இந்தத் தாக்குதலுக்கு இலக்கான சிலர், பணம் கோரும் அங்கீகரிக்கப்படாத வாட்ஸ்அப் செய்திகள் தங்களது கணக்குகளில் இருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதேவேளை, அவர்களது கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான இணைக்கப்பட்ட சாதனங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பாதிக்கப்பட்ட பயனர்களால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ்அப் குழுக்களையும் தாக்குதலாளர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

 

இத்தாக்குதலானது இணைக்கப்பட்ட சாதனங்களின் ஒத்திசைவைப் பாதிக்கும் மென்பொருள் பாதிப்புகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படலாம் என வெளிநாட்டு இணையப் பாதுகாப்பு நிறுவனமொன்றின் தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, ஐ.ஓ.எஸ். 16.7.12 இற்குக் குறைவான பதிப்புகளில் இயங்கும் சாதனங்கள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என நம்பப்படுகிறது. வழக்கமாக இடம்பெறும் இணையத் திருட்டு முயற்சிகளைக் காட்டிலும் இந்தத் தாக்குதல் மிகவும் நுட்பமானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

இதனால், ஐபோன் பயனர்கள் தங்களது ஐஓஎஸ் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை உடனடியாக அண்மைய பதிப்புகளுக்கு புதுப்பிக்குமாறு இலங்கை கணினி அவசரத் தயார்நிலை அணி அறிவுறுத்தியுள்ளது.

 

அத்துடன், இரு-படி சரிபார்ப்பு மற்றும் உரையாடல் பூட்டு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்துமாறும், பணம் கோரும் சந்தேகத்திற்கிடமான அல்லது வழக்கத்திற்கு மாறான செய்திகளை வேறு நம்பகமான தொடர்பு வழிமுறையின் ஊடாக உறுதிப்படுத்திய பின்னரே நடவடிக்கை எடுக்குமாறும் பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நிதி மோசடிகளை நோக்கமாகக் கொண்ட இணையக் குற்றங்களில் ‘ஜீரோ-கிளிக்’ போன்ற நுட்பங்கள் அதிகரித்து வருவதால், கையடக்கத் தொலைபேசி மற்றும் செயலிகளைத் தொடர்ந்து புதுப்பித்து பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button