நாட்டைக் காப்பாற்ற யோஷிதவை பலிகடாவாக்கிய மகிந்த!; புது புதுக் காரணம் கூறும் ராஜபக்ச தரப்பு..

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்தார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் கட்சி அவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டைக் காப்பாற்ற களமிறக்கப்பட்ட யோஷித
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்ட வந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர்கள் மீதும், அதில் பங்கெடுத்த இராணுவ வீரர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அன்று மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தார்.
அப்படிச் செய்யாவிட்டால், பிரபாகரன் இந்த நாட்டைத் தனது அரசாங்கமாக மாற்றியிருப்பார். வடக்கு சென்று இனறு குட்டிக் கரணம், அடிக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட எவராலும் அங்கு சென்றிருக்க முடியாது.

ஆனால், நாட்டைக் காப்பாற்றிய யோஷித ராஜபக்ச மீது இன்று தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம், தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீதான 300இற்கும் மேற்பட்ட கொள்கலன் கடத்தல், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
![]()