பலதும் பத்தும்

கரடியிடமிருந்து உரிமையாளர்களைக் காப்பாற்றிய நாய்: விருது வழங்கி கௌரவம்!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள நிபிகான் பகுதியில், வீடொன்றுக்குள் புகுந்த கருப்புக் கரடியிடமிருந்து தன் உரிமையாளர்களின் உயிரைக் காப்பாற்றிய ஏழு வயது நாய் ‘சுலோ’ ‘பியூரினா அனிமல் ஹால் ஆஃப் ஃபேம்’ விருதைப் பெற்றுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு 11 மணியளவில், கோலெட் ஸ்வெட்ஸ் என்பவர் தன் வளர்ப்பு நாயான ‘சுலோ’வை வழக்கம்போல வெளியே அனுப்ப வீட்டின் கதவைத் திறந்துள்ளார்.

அப்போது வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் மறைந்திருந்த சுமார் 300 பவுண்டு எடையுள்ள பெரிய கருப்புக் கரடி ஒன்று சுலோவைத் தொடர்ந்து வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தது. வீட்டிற்குள் புகுந்த கரடி கோலெட்டைத் தாக்கி, கடித்துக் குதறத் தொடங்கியது.

அப்போது, தூங்கிக் கொண்டிருந்த கோலெட்டின் கணவரை சுலோ விரைந்து சென்று எழுப்பியது. அவர் ஓடிவந்து கரடியைத் தடுக்க முயன்றபோது, கரடியின் கவனம் அவர் பக்கம் திரும்பியது.

அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, தம்பதியினரும் சுலோவும் சேர்ந்து போராடி கரடியை வீட்டின் கீழ் தளத்திற்கு தள்ளினர்.

காவல்துறையினர் வரும் வரை கரடி மீண்டும் மேலே வராதவாறு, படிகளில் நின்று குறைத்துத் துணிச்சலுடன் அதைத் தடுத்தது சுலோ. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கரடியை அப்புறப்படுத்தி தம்பதியை மீட்டனர்.

இந்தத் தாக்குதலில் சுலோ பலத்த காயமடைந்து, தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தது.

ஆபத்தான சூழலில் சாதுரியமாகவும் தைரியமாகவும் செயல்பட்டு உரிமையாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சுலோவை, “எங்கள் குடும்பத்தின் நிஜ கதாநாயகி” என அதன் உரிமையாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button