இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வுகள் நிறைவு; அடுத்த திகதி குறித்து ஒக்டோபர் 14 இல் முடிவு

இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளப்படுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் அகழ்வு பணிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்த நிலையில்

தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அறிக்கை உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு அடுத்த கட்ட அகழ்வு பணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் அகழ்வு பணிகள் முழுமையாக நிறைவுற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழி அகழ்வுப்பணி மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதலாம் கட்டம் 9 நாட்களும், இரண்டாம் கட்டம் 45 நாட்களும், மூன்றாம் கட்டம் 56 நாட்களுமாக மொத்தமாக 110 நாட்கள் இந்த அகழ்வுப்பணி நடைபெற்றது.

இதன் ஆரம்பத்தில் நீதிவானாக ஏ.ஏ.ஆனந்தராஜாவும், பின் தற்போதைய நீதிவான் செ.லெனின்குமாரும், மேலதிக நீதிவானாக ஹுசைனும் வழிநடத்தினர்.

சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களுடன் இந்த அகழ்வுப்பணியை மேற்கொண்டார்.

மேலும் களனி பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப்பணியில் ஈடுபட்டனர்.

இந்தப் பணியில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை பிரிவு மாணவர்கள், ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள், தடயவியல் பொலிசார், நல்லூர் பிரதேச சபை தொழிலாளர்கள் உட்பட பலர் ஈடுபட்டிருந்தார்கள்.

மேலும் இந்த அகழ்வுப்பணியில் 583 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை குவியல்களாக 51 மனித என்புக் குவியல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கிடையில் பிற சான்றுப் பொருட்களை வைத்து, அதற்கான கால அளவை தீர்மானித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க இருக்கிறார். அதேநேரம் இந்த புதைகுழி இரண்டில் எடுக்கப்பட்ட ஒன்பது மனித என்பு கூட்டுத் தொகுதிகள் சம்பந்தமான அறிக்கைகளையும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது.

இவற்றை வைத்துக்கொண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நிர்வாகக் கூட்டத்தில் இது சம்பந்தமாக முடிவெடுக்கப்பட்டவுள்ளது.

இங்கு அகழப்பட்ட என்புத் தொகுதிகளுக்கு காபன் 14 பரிசோதனை செய்ய வேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

அக்டோபர் 14 ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்ந்து அகழ்வுப்பணி செய்வது சம்பந்தமாக ஏற்கனவே நீதிவானால் செல்லையா பிரணவனுக்கு ஒரு வழிநடத்தல் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 28 நாட்களுக்கான பாதீட்டறிக்கை தாக்கல் செய்யுமாறும் 14 ஆம் திகதி எடுக்கப்படுகின்ற தீர்மானத்திற்கு அமைவாக மீண்டும் அகழ்வுப்பணி நடைபெறுவது சம்பந்தமாக தீர்மானிக்கப்பட இருக்கின்றது.

மாதிரி குழி வெட்டுதல் தொடர்பான விடயம் தொடர்பாகவும் பேராசிரியர் சோமதேவாவினால் அறிக்கை கொடுக்கப்பட இருக்கின்றது.

அந்த ஆய்வுகளினுடைய அறிக்கையின் அடிப்படையிலயும் அடுத்த அகழ்வுக்கான திகதி ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நிர்ணயிக்கப்படும் – என்றார்.

இதேவேளை இந்தப் புதைகுழியில் நேற்று புதன்கிழமை பத்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக ஒரு என்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை மொத்தமாக 583 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அனைத்து மனித என்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

பிற சான்றுப் பொருட்களாக அட்சரக் கூடு, காசு, மூன்று செப்பிலான மூன்று மோதிரங்கள் ஒன்றோடொன்று இணைந்தவாறு விரல் பகுதி எலும்பு கூட்டில் இருந்து மீட்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button