உலகின் கவனத்தை திருப்பி வரும்; செம்மணியை பார்வையிட கனடா குழுவுக்குத் தடை!; அரசாங்கம் அனுமதி வழங்காததால் செம்மணிக்கு வந்த குழு திரும்பிச் சென்றது

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட கனடா நாட்டின் தூதுக்குழுவிற்கு அரசாங்கம் அனுமதி வழங்காமையால் தூதுக்குழு செம்மணி பகுதிக்கு விஜயம் செய்து திரும்பிச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று கனடா தூதுவராலய குழு இந்த மனிதப் புதைகுழி களத்தைப் பார்வையிடுவதற்கு வருகை தந்திருந்தது. ஆனால் அவர்களுக்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்படாததினால் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அகழ்வுப்பணி நடைபெறுகின்ற இடத்திற்கு வருவதாக இருந்தால், இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்று நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட வேண்டும். அந்த அனுமதி கிடைக்காதபடியால் நீதிமன்றத்திலே எவ்வித விண்ணப்பமும் செய்யப்படவில்லை. ஆனபடியால் நீதிமன்றினால் அதற்கான கட்டளை ஆக்கப்படவில்லை. அரசாங்கத்தினால் அந்த விண்ணப்பம் தொடர்பில் அனுமதி வழங்கப்படாததால் அவர்கள் இந்தப் பிரதேசத்தைப் பார்க்க முடியாது திரும்பிச் சென்றிருக்கின்றார்கள்.
எம்மால் இலங்கை அரசாங்கத்திடம் நிர்வாக ரீதியான துறைசார் அமைச்சிடம் அனுமதி கேட்கப்பட்டது. “எங்களுக்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதால், நாங்கள் இந்த இடத்தின் வாயில் வரை வந்து பார்த்துவிட்டு போவதற்காக முயற்சி செய்தோம்” என்று கனடா தூதுக் குழுவினரால் எமக்கு தெரிவிக்கப்பட்டது – என்றார்.
![]()