இலங்கை

அரசின் இருப்புக்கு ஆபத்து வருகிறது!; தாமதித்தால் தவிக்க நேரிடும்

அரசாங்கம் மீதான மக்கள் செல்வாக்கு குறைவடையும் நிலையில் அந்த செல்வாக்கு மேலும் குறைவடைய முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்திக்காட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால்  நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்திற்கான மக்கள் செல்வாக்கு குறைவதையோ அதிகரிப்பதையோ பார்த்து நாங்கள் மாகாண சபைகள் தேர்தலை நடத்துமாறு கூறவில்லை. சில கருத்துக்கணிப்புகளில் அரசாங்கத்திற்கு உயர்வான செல்வாக்கு இருந்த போதும் தேர்தலை நடத்தமாறு கூறினோம். இப்போது புதிய கருத்துக்கணிப்பில் அரசாங்கத்தின் செல்வாக்கு குறைவடைந்துள்ள நிலையில் இன்னும் இது குறைவடைய முன்னர் தேர்தலை நடத்தமாறே கோருகின்றோம். இதன்படி தேர்தலை நடத்துமாறு எப்போதும் கூறுகின்றோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

இதேவேளை 22ஆவது திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்கு போக வேண்டும். இதனால் அந்த தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். இது தொடர்பான கருத்துக்கணிப்புகளை முன்னரே அறிந்தே லால்காந்த போன்றோர் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறுகின்றார். எவ்வாறாயினும் தேர்தலை நடத்த வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு மக்கள் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள சிறந்த வாய்ப்பாக தேர்தல் அமையும்.

இப்போது 38 வீதமான மக்கள் செல்வாக்கு இருக்கின்றது. இது இன்னும் குறைய முன்னர் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்திற்கு நல்லது. இவ்வாறு கூறியாவது தேர்தலை நடத்துவதற்கே நாங்கள் முயற்சிக்கின்றோம். இல்லையென்றால் அரசாங்கத்தின் இருப்புக்கு இது பாதிப்பாக அமையும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button