அலுவலக ஊழியர்களின் ஓய்விடமாக மாறிய சீனாவின் ‘பசுமை சரிவு’

சீனாவின் ஷாங்காய் நகரில் அமைக்கப்பட்டுள்ள தனித்துவமான படிக்கட்டு வடிவ பசுமை சரிவு, அலுவலக ஊழியர்களின் ஓய்விடமாக மாறி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
ஷாங்காயின் சூஹுய் மாவட்டத்தில் உள்ள ரன்வே பூங்காவில் அமைந்துள்ள இந்த 30 மீட்டர் நீளமான புல்வெளி சரிவு, முன்னாள் லோங்ஹுவா விமான நிலைய வளாகத்தில் உருவாக்கப்பட்ட 36 ஏக்கர் நேரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும்.
மக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவும், படுத்து உறங்கவும் ஏற்ற வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த சசாகி நிறுவனத்தினால் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மதிய உணவு இடைவேளைகளில் அருகிலுள்ள அலுவலகங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இங்கு வந்து ஓய்வெடுப்பதுடன், உணவு உட்கொண்டு நேரத்தை செலவிடுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இந்த இடம் “தொழிலாளர்களின் ஓய்விடம்” என அழைக்கப்படுவதுடன், “20 நிமிட பூங்கா விளைவு” என்ற கருத்தும் பிரபலமடைந்துள்ளது.
பல ஆண்டுகளாக சீன நகரங்களில் புல்வெளிகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், இந்தப் பூங்கா மக்கள் பசுமையான இடங்களை ஓய்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்தும் புதிய நகர்ப்புற அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
![]()