சாட்சியங்களை இல்லாமல் அழிப்பதற்காகவே குடும்பம் குடும்பமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டு புதைப்பு

தமிழர்கள் இலங்கையில் 1956 இல் இருந்து கட்டமைக்கப்பட்ட பேரினவாதத்தால் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர். அதற்கான சாட்சியமாக செம்மணிப் புதை குழியில் இருந்து சாட்சிகள் என்புக்கூடுகளாக அகழ அகழ வந்து கொண்டு இருக்கின்றன. இதுவரை 539 என்புக்கூடுகள் தமிழின அழிப்பை உறுதிப்படுத்தியுள்ளன.சாட்சியங்கள் இல்லாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக, குடும்பம் குடும்பமாக தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கருவறைக் கருவில் இருந்து குழந்தை, சிறுவர்,குமரர்,தாய் தந்தையர், வயோதிபர், அங்கவீனர் என்று வகை தொகை இல்லாமல்,அனைவரும் செம்மணியில் அரச பயங்கரவாதக் கருவியான இராணுவம் மூலமாக அழிக்கப்பட்டுள்ளனர்.அதனை என்புக்கூடுகள் பேசாமல பேசுகின்றன.பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் கூட தமிழினம் என்பதால்,இனவழிப்பில் இருந்து தப்பமுடியவில்லை.
இலங்கையில் 1956 இல் தமிழின அழிப்பு இக்கினியாகலையில் பேரினக் குண்டர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் 157 அப்பாவித் தமிழர்களை பேரினவாதக் குண்டர்கள் படுகொலை செய்தனர், அதற்கான நீதி வழங்காததால்,அடுத்து 1958 இல் 300 இற்கு மேற்பட்ட தமிழர்கள் தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர். அடுத்து 1961,1964 1974,1977 ,1981,1983 ஆண்டுகளில் தமிழின அழிப்புகள் சர்வசாதாரண நிகழ்வுகளாக நடைபெற்றன.
அவற்றை பேரினவாத அரசு கண்டுகொள்ளவில்லை. 1983 ஜூலை மாதத்தை தமிழினப் படுகொலைக்கான கறுப்பு ஜூலை என்று தமிழ் மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.அதில் 3000-5000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1983 இல் இருந்து தமிழின அழிப்பு என்பது தொடர் நிகழ்வாகி 2009 மே 18 வரை தீவிரமாக நடைபெற்றது.
அதன் பின்னரும் கலாசார, வாலாற்று ,உணர்வு ரீதியான அழிப்புகள் தொடர்கின்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய தமிழ் மக்களுக்கு முதற்கட்ட பதிலாக செம்மணி சிந்து பாத்தி புதைகுழி கண்களைத் திறக்க வைத்துள்ளது. இதே போல் பல புதைகுழிகளில் காணாமல் ஆக்கப்பட உறவுகளும், படுகொலை செய்யப்பட்ட உறவுகளும் என்புக்கூடுகளாக எமது இதயக் கதவுகளைத் தட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
சத்துருக் கொண்டான், வந்தாறு மூலைப் பல்கலைக்கழகம், மகிழடித்தீவு, கொக்கடிச்சோலை, மைலந்தனை, வீரமுனை, உடும்பன்கு்ளம், மண்டை தீவு, கொக்குத்தொடு வாய், திருகோணமலை போன்ற இடங்களில் புதைகுழிகள் பல இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.சட்டம் சமமாகச் செயற்படுமாயின், இப்புதைகுழிகளை அறிவியல் பூர்வமாக இலகுவாகக் கண்டறிய முடியும்.
தொல்லியல் அகழ்வுகள் மூலமாக கலாசாரத் திரிபுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் மத்தியில்,மனிதப்
புதைகுழிகளை கண்டறியும் விடயத்தில் காட்டப்படும் ஆர்வம் மிக மிகக் குறைவாகவே உள்ளது.
இதனை அரசு முறையாகச் செய்து சட்ட சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதனைச் செய்தால் இவைழிப்பு, அரசபயங்கரவாதம் என்பவற்றுக்கான கோரமான முகங்கள் வெளியில் தெரிந்து விடும்.
தேசிய மக்கள் சக்தி அரசானது, தமது அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பதை வெளிக்காட்டுவதற்கு, நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. செம்மணி போன்ற பல மனிதப் புதைகுழிகளை அகழ்வு செய்து முந்திய அரசாங்கங் களின் முகத்திரையைக் கிழிக்க முன்வர வேண்டும். அதன் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
மேலும், கடந்த கால அரசாங்கங்களின் கோரமான முகங்களை வெளிக்காட்ட முடியும். ஜேவிபி முன்னாள் தலைவர் றோகண விஜேவீரவின் கொலை தொடர்பாக, அவரது மகன் நீதியைத் தேட முயற்சிப்பதும் வரவேற்கத்தக்கதாகும் என்றார்.
![]()