இலங்கை

22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றுக்கு

அரசியலமைப்பைத் திருத்துவதற்கான 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியன இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பாராளுமன்றத்தின் முக்கிய நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் இந்தச் சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமூலமொன்றின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னரே அது முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதன்பின்னர் எவரேனும் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும்.

அதன்படி, உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கும்.

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயரும்.

நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த இரு சட்டமூலங்களும் முதலாம் வாசிப்பிற்காக சமர்ப்பிக்கப்படும் இன்றைய தினத்தில், இது தொடர்பாக எதிர்ப்பை வெளியிட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

நேற்று (17) மாலை கூடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

குறிப்பிட்ட சட்டமூலங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யவும், அம்மனுக்களை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் உள்ள 13 நீதிபதிகளைக் கொண்ட நீதியரசர்கள் குழாமை (Full Bench) நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button