22 க்கு எதிராக நீதிமன்றத்தை நாடத் தயாராகும் எதிரணிகள்

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நாளை செவ்வாய்க்கிழமை நீதியரசரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த புதிய திருத்தத்தின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65இல் இருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63இல் இருந்து 65 ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.
அரசியலமைப்பின் 121 ஆவது பிரிவின்படி, சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முதல் வாசிப்பிற்குப் பிறகு 14 நாட்களுக்குள் எந்தவொரு தரப்பினரும் அதை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியும். அத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், 3 முதல் 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.
இந்நிலையில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு எதிரான மனுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.
இதன்படி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களும் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகளும் நீதிமன்றத்தில் மனுக்களை சமர்ப்பிக்கவுள்ளன.
![]()