இலங்கை

மரணம் வரை அதிகாரம் நிலைத்திருக்க மாட்டாது; ஜனாதிபதி அநுரவுக்கு சீலரத்ன தேரர் எச்சரிக்கை

159 பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கின்றன என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரை அதிகாரம் நிலைத்திருக்காது என்று பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஜனாதிபதி அநுர குமார மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரின், ஜனாதிபதியுடனான சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் அண்மையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், ஜனாதிபதி பேசிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி ஊடகப் பிரிவு மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளது.

ஆனால், இந்த சந்திப்பில், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துக்களை மக்களுக்கு வெளிப்படுத்தாது ஜனாதிபதி ஊடகப் பிரிவு மூடி மறைத்துள்ளது.

ஜனாதிபதியை மட்டும் போற்றிப் புகழும் இந்த அதிகாரிகளால், மக்களிடத்தில் விமர்சனத்திற்கு உள்ளாவது ஜனாதிபதியே ஆகும். எனவே, ஜனாதிபதி அநுர குமார தன்னைச் சுற்றியுள்ள அதிகாரிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

நாட்டின் தற்போதைய நிலையில், நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது அவசியமற்றது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு இந்த சட்டமூலம் வருகின்றது. இதற்கு ஆளும் தரப்பினரும் கை உயர்த்தக் கூடாது.

மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயற்பட விரும்பாதவர்கள், 18ஆம் திகதி விடுமுறை எடுத்துக் கொண்டு மண்வெட்டியோடு தங்களுடைய வயலுக்குச் சென்று விவசாய வேலையாவது செய்யுங்கள்.

அதைவிடுத்து 159 பெரும்பான்மை இருக்கின்றது என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரையில் அதிகாரம் நிலைத்திருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button