2027 இல் பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல் இல்லை; சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆட்சியை நீடிக்கத் திட்டம்

பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்குப் பதிலாக 2027ஆம் ஆண்டில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகாரத்தை நீடித்துக்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நீதிபதிகளின் வயதை அல்லது சம்பளத்தை மாற்றுவதன் மூலம் அரசாங்கங்கள் அவர்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதைத் தடுக்கவே நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இந்த அரசாங்கம் நீதிபதிகளின் ஓய்வு வயத்தை இரண்டு ஆண்டுகள் நீடிக்கிறது. அடுத்த அரசாங்கம் தமக்கு விருப்பமில்லாத நீதிபதிகள் இருந்தால் இரண்டு ஆண்டுகள் குறைக்கலாம். எனவே, அரசாங்கங்கள் தங்களுக்குத் தேவையானவாறு இதை மாற்றி நீதிபதிகளின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்துவதைத் தடுப்பதே ஓய்வூதியம் மற்றும் ஓய்வுபெறும் வயதை அரசியலமைப்பில் சேர்ப்பதன் நோக்கமாகும்.
மறுபுறம், வழக்குத் தாமதங்களுக்கு இதுதான் தீர்வு என்ற அரசாங்கத்தின் கூற்றை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் சுமார் 10,000 வழக்குகள் மட்டுமே உள்ளன. ஆனால் பொதுவாக சகல நீதிமன்றங்களிலும் 1.1 மில்லியன் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. தீர்வுகாண வேறு நடவடிக்கைகள் உள்ளன.
அதேபோன்று சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சிறைச்சாலைகளுக்குப் பிற வழிமுறைகள் உள்ளன. அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பிரச்சினைகள், நாட்டின் சட்டப் பிரச்சினைகள், நீதித்துறை நடைமுறையிலுள்ள சிக்கல்கள் ஆகியவற்றுக்கு ஏராளமாகத் தீர்வுகள் உள்ளன. குறிப்பாக டிஜிட்டல் மயமாக்கல் குறித்த தீர்வுகள் உள்ளன. எதிர்காலத்தில் வழக்குகளை விசாரணை செய்ய செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தேவை, அதற்கு இளைஞர்கள் தேவை என்று கூட ஒருவர் வாதிடலாம். எனவே, இந்தச் செயல்முறை அந்த வாதங்களுக்கு அமைவாக நடக்கும் ஒன்றல்ல. இதன் பின்னணியில் ஓர் மறைமுக நோக்கம் உள்ளது. அதை நாங்கள் மிகத் தெளிவாகக் கூறுகிறோம். 2028 முதல் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது, அதற்கேற்ப 2027 இல் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்குப் பதிலாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகாரத்தைக் கைப்பற்ற இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதற்கு முன்னதாக, தங்களுக்கு சவாலாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களைத் திருடர்கள் என முத்திரையிட்டு சிறையில் அடைக்க நினைக்கிறார்கள். உண்மையில் திருடர்கள் என்றால் யார்? இந்த நாட்டை திவாலாக்கிய, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை திவாலாக்கிய, 2022 இல் எரிவாயு சிலிண்டர்களை வெடிக்கச் செய்து மக்களைக் கொன்ற, மின்சாரத்தை துண்டித்த, அல்லது நிதியமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தி நாட்டின் டொலர் கையிருப்பைச் சூறையாடிய எவர் மீதாவது வழக்குத் தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதா? மறுபுறம், இந்தத் திருடர்களைப் பற்றிப் பேச இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
323 கொள்கலன்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. 90 நிலக்கரி கப்பல்கள் முற்றாக மறைந்துவிட்டன. இன்றைய நிலவரப்படி, வரவிருக்கும் காலத்தில் சரியான திகதியில் நிலக்கரி கொண்டு வரப்படாவிட்டால், செப்டம்பர் 12 ஆம் திகதியளவில் மிகக் கடுமையான எரிசக்தி நெருக்கடி ஏற்படும். இது பாராளுமன்றத்திலும் அறிக்கையிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2, 3 திகதிகளில் பெய்த பலத்த மழை காரணமாகவே நிலைமை இந்த அளவிற்காவது தப்பியுள்ளது. முழு மின்சாரத் துறையையும் நெருக்கடிக்குத் தள்ளினார்கள். 30 கப்பல்களில் மோசடி நடந்தது, இரண்டு டீசல் கப்பல்களில் தெளிவாக மோசடி நடந்தது. அவை குறித்து நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம். அதேபோன்று திறைசேரி 8.7 பில்லியனுக்கும் அதிகமான தொகை காணாமல் போயுள்ளது. என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? ஒரு திருடனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்காமல், வெசாக் கார்டுகள் அச்சிட்டார்கள் அல்லது சுவரொட்டிகள் ஒட்டினார்கள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தமக்குச் சவாலாக இருக்கும் தலைவர்களைச் சிறைக்குள் தள்ளுவது மட்டுமே நடக்கிறது.
அவர் விரும்பும் நேரத்தில் கைகளை உயர்த்தும் ஒரு குழுவோ அல்லது அவருக்குச் சாதகமாகச் செயல்படும் நீதித்துறையோ இருந்தால், அவரால் இவற்றைச் செயல்படுத்த முடியும். ஆனால், நாட்டின் நீதிபதிகளும் நாடாளுமன்றத்தின் தற்போதைய நிலைமையும் இதற்கு இடமளிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனவே, நாங்கள் மக்களிடம் செல்வோம், மக்களுடன் இணைந்து இதைத் தீர்த்துக்கொள்வோம் என்றார்.
![]()