நாட்டில் சர்வாதிகார ஆட்சியின் பண்புகள் வெளிப்படுவதாக குற்றச்சாட்டு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அல்லது பணிக்காலத்தை நீட்டிக்க முயற்சிப்பது சர்வாதிகார ஆட்சியின் அறிகுறியாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
என்.எம். பெரேரா நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் அன்றைய நீதிபதிகளை நீக்கி, தனக்கு வேண்டியவர்களை நியமிக்க ஜே.ஆர். ஜயவர்தன நடவடிக்கை எடுத்த முறையை நினைவுகூர்ந்த அவர், தற்போதும் நீதிபதிகளின் பணிக்காலத்தை நீடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவது கவலைக்குரிய நிலைமையாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரண மரபுகளின்படி நீதிபதிகள் உரிய வயதில் ஓய்வுபெற வேண்டும் எனவும், அவர்களின் பணிக்காலத்தை நீடிக்கும் இத்தகைய முன்னுதாரணங்களை உலகின் பிற ஜனநாயக நாடுகளில் காண முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் ஜிம்பாப்வே போன்ற சர்வாதிகார நாடுகளிலேயே காணப்படக்கூடிய அம்சங்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன மேலும் குறிப்பிட்டார்.
![]()