இலங்கை

செம்மணி இரகசியங்கள் பல உண்டு; சோமரத்ன ராஜபக்ஷவை உடன் செம்மணிக்கு கூட்டி வாருங்கள்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்ஷவின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். அவர் உண்மை சொல்ல வேண்டும். அவர் இந்த செம்மணிக்கு அழைத்துவரப்பட வேண்டும். அதற்காக சர்வதேச சமூகம் முழு அழுத்தத்தையும் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார்.

பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறீதரனிடம் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவின் செம்மணி கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அவருடைய கருத்து அமைவது துரதிர்ஷ்டவசமானது.

பல குழுக்கள் இங்கு இருந்திருக்கலாம். ஆனால், குழுக்கள் தங்களுக்குள் மோதி யாரையும் கொண்டுவந்து தாட்டதாக நாங்கள் இதுவரை அறியவில்லை. அவ்வாறான சம்பவங்களுக்கு அவர் ஒரு கதை வடிவம் கொடுக்க முனைவது நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நாட்டினுடைய நீதி அமைச்சர் மக்களை திசைதிருப்பும் வகையிலே இவ்வாறான வார்த்தைகளை உதிர்க்கக்கூடாது. தமிழர்கள் எதிர்பார்ப்பது போல இது நூற்றுக்கு 100 சதவீதம் உண்மையானது. எனனில், இங்கே நடந்த பல பேர் காணாமல் போயிருக்கிறார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் காணாமல் போயும், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். இதனை நாங்கள் சொல்லவில்லை, கிரிசாந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இந்தப் புதைகுழிகளுக்கு சாட்சியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்ச சொல்லியிருக்கிறார். இப்பொழுதும் சொல்லுகிறார்.

சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் செம்மணிக்கு அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் தோண்ட வேண்டும். அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும்.அந்த உண்மைகளை மறைப்பதற்கு எங்களிடம் இருந்த போராளிக் குழுக்களைப் பற்றியோ அல்லது இது ஒரு அனாமதேய விடயங்கள் போலவோ அதற்கான ஒரு சோடனைக் கதைகளைச் சொல்ல அமைச்சர் முன்வரக் கூடாது என்றார்.

சிறைச்சாலை கலவரம் தொடர்பிலும் அதனால் சோமரத்ன ராஜபக்ச பாதிப்பு ஏற்படும் என்ற ஜயம் தொடர்பிலும் கேள்வி எழுப்பியபோது, இதிலும் ஒரு கொலை நடந்தால், அவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டோ அல்லது அவர் கொலைக்கு உள்ளாக்கப்படுவாராக இருந்தால் இலங்கை அரசாங்கத்தினுடைய நன்மதிப்பும், இலங்கையினுடைய நீதித்தன்மையும் மீண்டும் உலக அரங்கிலே கேள்விக்கு உட்படுத்தப்படும்.

ஆகவே, சோமரத்ன ராஜபக்ஷவுடைய உயிர் காப்பாற்றப்பட வேண்டும். அவர் உண்மை சொல்ல வேண்டும். அவர் இந்த இடத்திற்கு அழைத்துவரப்பட வேண்டும். அதற்காக சர்வதேச சமூகம் அதற்குரிய முழு அழுத்தத்தையும் வழங்க வேண்டும். குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இதிலே தலையிட வேண்டும். தலையிட்டு நடந்த உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படுகிற பொழுதுதான் ஒரு நாட்டிலே நடந்த விடயங்களுக்கான உண்மைத் தன்மைகள் வெளியிலே கொண்டுவர முடியும் – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button