இலங்கை

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து ஐ.நா. அறிக்கையாளர் அதிருப்தி

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்குரிய அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் , நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்திற்கான ஐ.நாவின்சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தையும், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு கடந்த 07 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தம், அதன் தற்போதைய வடிவம் மற்றும் தாக்கங்களின் அடிப்படையில், நீதித்துறை சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமை தொடர்பான சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளுக்கு அமைவாக இல்லாமல் இருக்கக்கூடும் என்று சாட்டர்வைட் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதிகளின் பதவிக் காலம் என்பது நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படைப் பாதுகாப்பாகும் எனக் கூறிய சாட்டர்வைட், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் இலங்கைக்கு உள்ள கடமைகளை, குறிப்பாகச் சுதந்திரமான மற்றும் பக்கசார்பற்ற தீர்ப்பாயத்தின் முன் விசாரணை பெற குடிமக்களுக்கு உள்ள உரிமையை சுட்டிக்காட்டினார்.

ஒரு தற்காலிக அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தற்போது பதவியில் இருக்கும் நீதிபதிகளின் பதவிக் காலத்தை உடனடியாக நீட்டிப்பது, நீதித்துறையில் நிர்வாக மற்றும் சட்டமன்றத் தலையீடுகள் குறித்த கவலைகளை எழுப்பக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button