இலங்கை

செம்மணியில் மனிதநேயத்திற்கு எதிரான கொடூரம் நடந்துள்ளது அந்தக் கொடூரத்திற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித நேயத்திற்கு எதிரான கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்த மனித நேயத்திற்கு எதிரான, கொடூரத்திற்கு எதிராக நாம் அனைவரும் மனிதர்களாக ஒன்றிணைந்து சர்வதேசத்திற்கு எமது பலத்தினை காட்ட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

தாயகச் செயலணி அமைப்பினால் முன்னெடுக்கப்படுகின்ற நீதியின் ஓலம்- 2 போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனிதக் கொலை தொடர்பான அகழ்வுப் பணிகள் செம்மணியில் 1996 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருகின்றன. தற்போது 500 க்கும் மேற்பட்ட உறவுகளுடைய எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணியில் மீட்கப்படும் எமது காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்பதுதான் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற கோரிக்கை.

இந்த கொடூரத்தைச் செய்தவர்கள் கண்டறியப்பட வேண்டும். கண்டறியப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும். இந்த விடயங்களை செய்யக்கூடிய வல்லமை தற்போது இலங்கை அரசாங்கத்திற்கே உள்ளது. இந்த மூன்று விடயங்களையும் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு.

ஏற்கனவே செம்மணியில் கண்டறியப்பட்ட 12 மனித எச்சங்கள் சந்திரிக்கா அம்மையார் காலத்தில் இங்கிலாந்தில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதனை ஆராய்ந்தால் கூட அந்த கொலைகள் செய்யப்பட்ட முறைமை மற்றும் காலம் ஆகியவற்றை கண்டறிய முடியும். அதன் ஊடாக பல தகவல்களைப் பெறலாம். அதேநேரம் தற்போது கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்களை முறையான முறையில் பாதுகாக்க வேண்டும். அதேநேரம் அவை கொலை செய்யப்பட்ட காலம் மற்றும் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்ற பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அந்தவகையில் சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாக தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவு செய்ய வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் நீதியின் ஓலம் 2 என்ற போராட்ட நிகழ்வுக்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button