இலங்கை

கன்னியா வெந்நீரூற்று சிவனின் நித்திய பூசைகள் தடுத்து நிறுத்தம்!;  ஆடி அமாவாசை தீர்த்தத்திற்கு சென்றோர் விரட்டியடிப்பு

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று சிவன் கோவிலில் நித்திய பூசைகளை தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ள அதேநேரம் நேற்று புதன்கிழமை தொல்லியல் திணைக்களத்தினரின் கடும் கெடுபிடியால் பலத்த சிரமங்களுக்கு மத்தியிலேயே மக்கள் தமது ஆடி அமாவாசை பிதுர்கடன்களை நிறைவேற்றினார்கள்.

ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு நேற்று கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் தீர்த்தம் இடம்பெற்றது. இதன்போது விசேட பூசைகளுடன் ஆரம்பமான நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து வெந்நீர் கிணற்றில் நீராடி தமது கடமையை நிறைவேற்றினார்கள்.

கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் தங்கள் பிதுர்கடன்களை தீர்ப்பதற்காக நேற்று காலை மக்கள் கூடியிருந்த போது அங்கு கடமையில் இருந்த தொல்லியல் திணைக்கள ஊழியர் சிவன் கோலில் கதவைத் திறந்து விடாததால் சில மணி நேரம் அங்கு ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து கோவில் திறக்கப்பட்டது. ஆலயத்தினுள் இருவர் இருவராக மாத்திரமே நிற்க முடியும் எனக் கூறி ஏனையோர்,ஆலயத்திற்கு வெளியிலும் நிற்க விடாமல் அங்கு வந்த தொல்லியல் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களால் துரத்தியடிக்கப் பட்டமையினால் மீண்டும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீரூற்று மற்றும் கன்னியா சிவன் கோவிலில் தமது முன்னோர்களின் பிதுர் கடன்களை கூட செய்ய பல்வேறு தரப்பிடமும் அனுமதி பெற வேண்டியிருப்பதுடன் பல சவால்களுக்கு மத்தியில் கருமங்களைச் செய்ய வேண்டி இருப்பதாகவும் கோவிலில் கடந்த காலத்தில் இடம்பெற்று வந்த நித்திய பூசைகளை தற்போது செய்ய விடாது தடுத்து நிறுத்தியிருப்பதன் மூலம் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமை முற்றாக மறுக்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் கவலையும் கடும் விசனமும் தெரிவித்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button