இலங்கை

வெலிக்கடை சிறையில் பூஜித் – ஹேமசிறி: சிறைக்குள் நடப்பது என்ன..!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருவருக்கும் சிறையில் எவ்வித சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஜித் ஜயசுந்தர 33176 என்ற கைதி இலக்கத்திலும், ஹேமசிறி பெர்னாண்டோ 3317 என்ற கைதி இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

சிறை நிர்வாக நடவடிக்கைகள் கைதி இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சிறைக்குள் அவர்களுக்கு தென்னைநார் தலையணை, பாய், தகரத்தட்டு மற்றும் தகரக் கோப்பை உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றைப் பெற்றுக்கொண்ட போது ஹேமசிறி பெர்னாண்டோ உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாகவும், பூஜித் ஜயசுந்தரவும் கண்களில் கண்ணீரை மறைத்தபடி அவற்றைப் பெற்றுக்கொண்டதாகவும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் மரண தண்டனை கைதிகள் தடுத்து வைக்கப்படும் H1 சிறை அறையில், நிமல் என்ற மற்றொரு கைதியுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் சிறை வாழ்க்கை காரணமாக கடுமையான மன அதிர்ச்சிக்கு உள்ளான இருவரும், தற்போது நிமலுடன் இணைந்து தியானம் மற்றும் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஹேமசிறி பெர்னாண்டோ தான் எந்தத் தவறும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி வருவதுடன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மேல்முறையீட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வயது மற்றும் உடல்நிலை காரணமாக சிறை வாழ்க்கைக்கு பழகுவதில் அவருக்கு கூடுதல் சிரமங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பூஜித் ஜயசுந்தரவை சிறைக்கு சென்ற முதல் நாளிலேயே அவரது மகனும், ஹேமசிறி பெர்னாண்டோவை அவரது மனைவியும் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இவர்களை போலவே முன்னாள் அரசியல்வாதிகள் பலரும் சிறைச்சாலையில் இருக்கின்றார்கள். குறிப்பாக மகிந்தானந்த அளுத்கமகே நளின் பெர்னாண்டோ துமித சில்வா, சமிந்த வாஸ் குணவர்த்தன பலர் பேர் இருக்கிறார்கள். இவர்கள் யாரையுமே இவர்கள் சந்திக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

சிறை விதிகளின்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை உறவினர்கள் பொதுவாக மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும். எனினும், கிறிஸ்மஸ், வெசாக் மற்றும் சிங்கள-தமிழ் புத்தாண்டு போன்ற விசேட நாட்களில் இதற்கு விதிவிலக்குகள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button