தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு: முழு ஆதரவு வழங்குவோம்; சஜித் பிரேமதாச உறுதி

மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடாத்தப்பட்டு, அவற்றுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்குதல் உள்ளடங்கலாக தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியனும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், பா.உ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முருகேசு சந்திரகுமாரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பா.உ ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி, பா.உ மொஹமட் தாஹிர் மற்றும் பா.உ மொஹமட் தாஹிரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பா.உ ஜீவன் தொண்டமானும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் பாரத் அருள்சாமியும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மாகாணசபைத்தேர்தலை உடனடியாக நடாத்துதல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுத்தல் மற்றும் மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் குறித்தும், இவைபற்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தாம் எடுத்துரைத்த விடயங்கள் குறித்தும் மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித்தலைவரிடம் எடுத்துரைத்தனர்.இலங்கை செய்திகள்
அவற்றை செவிமடுத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடாத்தப்படுவதையும், மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படுவதையும் தான் ஆதரிப்பதாகவும், அதற்குரிய ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
அதேபோன்று இச்சந்திப்பின்போது பேசப்பட்ட ஏனைய விடயங்களையும் ஏற்றுக்கொண்ட சஜித் பிரேமதாஸ, அவற்றை முன்னிறுத்தி பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
![]()